கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய வலையமைப்பு காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த வலையமைப்புடன் தொடர்புடையவர்களின் சொத்துக்ககளை முடக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் யுக்திய சுற்றிவளைப்புத் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலிங்க ஜயசிங்கவின் உத்தரவின் பிரகாரம் யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கடந்த வாரம் சாவகச்சேரிப் பகுதியில் வைத்து யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கஞ்சாவுடன் சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணையில் கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய வலையமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் வானொலி பெட்டிக்குள் கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மன்னார் பேசாலையில் இருந்து கஞ்சாவை பெற்றுக் கொள்வது கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகநபரின் வீட்டை நேற்று முன்தினம் சுற்றிவளைத்துள்ளனர்.
மேலும், வீட்டிற்குள் ஒன்றரை அடி ஆழத்தில் மண்ணில் கொடிய உயிர் கொல்லியான கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. சுமார் 16 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் ‘யுக்திய ‘ சுற்றிவளைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டதால், சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குதல், சொத்துக்கள் முடக்கம் ஆகிய நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.