“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் வெளிவராத 8 விடயங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று வாக்குமூலமாக வழங்கினேன்.” – இவ்வாறு கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். இந்தநிலையில், கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் எனக்குச் சிறந்த முறையில் வரவவேற்றபளிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் செயற்படும் பொறுப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இல்லை எனக் குறிப்பிடவில்லை.
மாறாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரை உரிய முறையில் சேவையாற்றுவதற்கு இடமளிக்கவில்லை எனத் தோன்றுகின்றது.
அதேநேரம், சவால்மிக்க கேள்விகள் எவையும் நேற்று அவர்கள் கேட்கவில்லை.
தற்போது வெளியாகாத பல விடயங்களை நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்தேன்.
அதேநேரம் முன்னதாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி ஒன்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுமாயின் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் உள்ள சகல தரப்பினர் தொடர்பான தகவல்களும் வெளியாகும்.” – என்றார்.