வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழு மின்சார வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என நிதி தொடர்பான குழு தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்த பகுப்பாய்வு கிடைக்கும் வரை, உரிமம் வழங்கும் காலத்தை நீட்டிக்கும் உரிய வர்த்தமானிக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையின் ஆரம்பம் முதல், வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நபர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வழங்குமாறு குழு கோரிய போதிலும், சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி தகவல்களை வழங்க முடியாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வரிச்சலுகை மூலம் 100 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், சாதாரண வேலைகளில் ஈடுபட்டுள்ள பல தொழிலாளர்கள் இவ்வாறான பெறுமதியான வாகனங்களை கொண்டு வந்துள்ளார்களா என்ற சந்தேகம் அக்குழுவில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை 1,019 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 109.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், இதுவரை வழங்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திரங்களின் பெறுமதி 46 மில்லியன் டொலர்கள் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ள பின்னணியில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவே சந்தர்ப்பம் என்பதனால் முறைகேடுகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.