தேசியத் தலைவரின் வீட்டுக்கு முன்னால் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்று காலை 11மணியளவில்  தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வீட்டின் முன்றலில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை ஆலடிச்சந்தியில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி  இரு மாவீரர்களின் தந்தையான தங்கேஸ்வரனால்  பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும்  விநியோகிக்கப்பட்டது.  இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து  நெல்லியடி மற்றும் அச்சுவேலியிலும் நாளை   15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும்.
இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்பொழுது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews