உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல்…! யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல் என யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் நேற்றையதினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.,

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசினால் 3 தசாப்தங்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புப் போரின் ஒரு முக்கிய குறியீடு தான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி.

இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சியை குடித்து சாவிலிருந்து தப்பியவர்கள் சிலர் இன்னமும் நம் மத்தியில் வாழ்கிறார்கள்.

அவர்களது துயர அனுபவம் வருங்கால சமுதாயத்தினருக்கு விளக்கிப் பகிரப்பட வேண்டியதொன்று.

அரசாங்க புள்ளிவிபரங்களின்படி முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு குறுகிய நிலப்பரப்பில்(பாதுகாப்பு வலயம் என்று அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட) அப்போதைய அரச புள்ளிவிபரத்தின் படி, மிக நெருக்கமான முறையில் முற்றுகைக்குள்ளாயிருந்த மக்களின் எண்ணிக்கை 2,70,000 பேர்.  பல்வேறு பொருளாதாரத் தடைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த இவர்களுக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டளவில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

ஒரு நேர உணவைப்பெறுவதே பெரும்பாடாயிருந்த  இவர்களது எண்ணிக்கையை மறுபக்கத்தில் ஷெல் வீச்சுக்களும் பல்குழல் பீரங்கித்தாக்குதல்களும் குறைத்துக் கொண்டிருந்தன.

 

யுத்தம் முடிந்து, சரணடைவுகளின் பின் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்தவர்களது எண்ணிக்கை 3,70,000 இருந்தது. இவர்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை தமது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வர உதவியது இம்மக்கள் தம் உடமைகளில் வைத்திருந்த அரிசி, தேங்காய் போன்றவற்றைப்பகிர்ந்து காய்ச்சிய கஞ்சிதான்.

இதனால் தான் இம்முள்ளிவாய்க்கால் கஞ்சி இவர்களது உயிர் காத்த கஞ்சியாகவும் வரலாற்றுச் சிறப்புப் பெறுகின்றது.

இலங்கை வாழ் தமிழர்களின் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் எதிர்கொண்ட மிகவும் மோசமான துன்பங்களையும் இலட்சக்கணக்கான மக்கள் காவு கொள்ளப்பட்டமையையும் நினைவு கூருவது தான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாற்றம்.

 

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறலாகும். தற்போது பல்வேறு இடங்களில் இடம் பெற்று வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாற்ற நிகழ்வுகளை ஆட்சியாளர்கள் தடுக்க முயல்லது குறிப்பாக கிழக்கில் சம்பூர் பகுதியில் இந்நிகழ்வுகளில் பங்கெடுத்தவர்களை இரவிரவாகக் செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மிக மோசமான மனித உரிமை மீறலாகும்.

ஒரு பக்கத்தில் இப்படியான மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுக்கொண்டு மறுபக்கத்தில் காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் செயற்பாடுகளையும், இவங்களுக்கான நல்லினக்க செயற்பாடுகளை முடுக்கி விடுவது எல்லாம் வெறும் போலி நாடகமே, சர்வதேசத்தைத்திருப்திப்படுத்த அரங்கேற்றப்படும் நாடகங்களேயன்றி வேறில்லை.

சர்வதேச மன்னிப்புச்சபை (Amnesty International) இலங்கையில் இடம் பெற்று வரும் சிறுபான்மையினருக்கெதிரான மனித உரிமை மீறல்களை துவக்கதிலிருந்தே சுட்டிக்காட்டி வருவது நாமறிந்ததே. இவ்வாரத்தில் இச்சபையின் செயலாளர் அக்னஸ் கலமார்ட் இலங்கைக்கு வந்து குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் பங்கெடுப்பதை நாம் வரவேற்கின்றோம்.

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வெளியேறிய / வெளியேற்றப்பட்டபின் நடுநிலை சாட்சியங்கள் இல்லாத நிலையிலேயே மக்கள் கொத்துக்கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் பொது மக்களுக்குப்பாதிப்பில்லாமல் (Zero Casualty) வெற்றிகொள்ளப்பட்ட போர் என்று அரசு சொல்லிக்கொண்டிருந்தபோது மறைந்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை புள்ளி விபரங்களின்படி இறுதிப்போரில் மட்டும் 146,000 மக்களுக்கு மேலாகக் கொன்றொழிக்கப்பட்டார்கள் என்ற விபரத்தை வெளிக்கொணர்ந்திருந்தார்!

இவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளைத் தடுப்பது, கஞ்சி காய்ச்சி பரிமாறியவர்களை கைது செய்வதும் தடுத்து வைப்பதும் பொறுப்புக்கூறலுக்கும், நீதியை நிலை நாட்டுவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நிலைத்த சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் பாரிய பின்னடைவாகும் என்பதை யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வலியுறுத்துகின்றது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews