தம்புள்ளை தண்டர்ஸ் அணியுடன் தொடர்புடைய பங்களதேஷ் பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

LPL போட்டியில் தம்புள்ளை தண்டர்ஸ்  அணியுடன் இணைந்து செயற்படும் பங்களதேஷ் பிரஜையான தம்மி ரஹுமான் என்ற நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (22) கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணை பிரிவினர், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணை பிரிவினால் நடாத்தப்படும் விசாரணை ஒன்றில், குறித்த சந்தேகநபருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவு காரணமாகவே, விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் குறித்த நபரை தடுத்து வைத்து, விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணை பிரிவிடம் ஒப்படைத்திருந்தனர்.

ஆட்ட நிர்ணயம் தொடர்பான யோசனைகளை முன்வைக்க முயற்சித்துள்ளதாக குற்றம்சுமத்தியே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews