விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மீண்டும் எழுச்சியடைய முயற்சி – அலிசப்ரி குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனுவில், மனுதாரர்கள் தரப்பினர்களிடம் விரிவான சாட்சிய அறிக்கைகள், கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு, கடந்த 21 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையத்தினால் முன்வைக்கப்பட்ட தீர்ப்பு பிரித்தானிய நீதிமன்றத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தகவலை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் என்பது பிரித்தானிய நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீனமான நீதிமன்றம் என்றும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓய்வு பெற்ற மூத்த உயர் நீதிமன்ற நீதிபதிகளே இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழம் என்ற தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவு வழங்குகின்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கமே தடையை நீக்குமாறு கோரியதாக அலிசப்ரி சுட்டிக்காட்டுகின்றார்.

எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய இராச்சியத்தில் தடை செய்யப்படவில்லை என்று அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அகிம்மை வழிமுறைகள் மூலம் தனிநாடு என்ற நோக்கத்தை அடைவதற்கு முயற்சிப்பதாக அலிசப்ரி குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வதேச நாடுகள், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கச் செய்வதன் மூலம் தாங்கள் மீண்டும் புத்துணர்வைப் பெறும் நிலையை உருவாக்குவதே, விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு கொண்டுள்ள மூலோபாய அணுகுமுறை என்றும் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews