விடுதலைப் புலிகளுக்கு அறிவித்தல் அனுப்பிய இந்தியாவின் தீர்ப்பாயம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ‘சட்டவிரோத அமைப்பு என்று ஏன் பிரகடனப்படுத்தக் கூடாது?’ என்பதற்கான காரணங்களை விளக்குமாறு, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவின் தீர்ப்பாயம் ஒன்று அறிவித்தல் அனுப்பியுள்ளது.

டெல்லி மேல் நீதிமன்றில் இயங்கும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் சட்டத் தீர்ப்பாயம் கடந்த 14ம் திகதி இந்த அறிவித்தலை அனுப்பியுள்ளது.

கடந்த மே மாதம் இந்தியா, விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்திருந்தது.

2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும், சர்வதேச அளவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்வதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்த குறிப்பு ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயற்பாடுகள், இன்னும் இந்தியாவின் இறைமையைப் பாதிக்கும் வகையிலேயே அமைந்திருப்பதாக, இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் மேற்குறிப்பிட்ட தீர்ப்பாயத்தில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சட்டவிரோத அமைப்பு அல்லவென்று அறிவிக்குமாறு இந்த தீர்ப்பாயத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு அறிவிக்க வேண்டியதற்கான காரணங்களை விடுதலைப் புலிகளிடமே இந்தத் தீர்ப்பாயம் கோரியுள்ளது.

இதற்காக விடுதலைப் புலிகளுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பாயத்தின் அடுத்த அமர்வு ஜூலை மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கம், சட்டத்தரணி ஊடாக தமது விளக்கத்தையோ அல்லது ஆட்சேபனையையோ பதிவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews