ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி செயற்பாடுகள் இன்றைய தினம் பாதிக்கப்பட்டிருந்ததுடன் பெற்றோரும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டார்கள்.
சம்பள நிலுவையினை வலியுறுத்தி இன்றைய தினம்(26) அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இன்றைய தினம் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவு குறைவானதாகவேயிருந்ததை காணமுடிந்தது.
அத்துடன் பாடசாலைக்கு மாணவர்களின் வருகை குறைவான நிலையிலேயே இருந்ததுடன் பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பிச்சென்றதை காணமுடிந்தது.
அதேவேளை, சில பாடசாலைகளில் இன்றைய தினம் சில ஆசிரியர்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்ததாகவும் கல்வித்திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.