சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் நேற்றைய தினம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் பூஜையில் விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து மேலும் தெரிய வருவது,
அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வைத்தியசாலை நோயாளிகளின் நலன் கருதி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன் காரணமாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றியிருந்தது.
இதனையடுத்து சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் பணிபுரியும் வைத்தியர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தொடக்கம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் நேற்று முன் தினமும் நேற்றைய தினமும் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற செல்லுகின்ற நோயாளிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
இதனால் தென்மராட்சியின் பொது அமைப்புக்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து நேற்று முற்பகல் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து நிர்வாக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிப்பதற்காக வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தனர்.
இதனையடுத்து அங்கு சென்றிருந்த சாவகச்சேரி போலீசார் வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தவர்களை அகற்ற முற்பட்டனர். இதன்போது அமைதியான முறையில் நாங்கள் மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து சிகிச்சை நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க கோரிக்கை முன்வைக்கவே இங்கு வந்தோம். எந்தவித இடையூறுகளும் செய்யாமல் இருக்கின்றோம் ஆகவே எம்மை கலைந்து செல்லுமாறு கூற முடியாது என்று தெரிவித்த முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோரை அங்கிருந்த சாவகச்சேரி போலிசார் கைது செய்தனர்.
இதனை அடுத்து இவ்விடயம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் அவர்களின் கவனத்திற்குக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு உடனடியாக சென்றிருந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்தி இணைப்பாளர் பொதுமக்களோடும், வைத்தியசாலை நிர்வாகத்தோடும், கலந்துரையாடியதுடன் உடனடியாகவே சாவகச்சேரி போலீஸ் நிலையத்திற்கு சென்று கைது செய்யப்பட்ட முன்னாள் நகர சபை உறுப்பினரையும் பார்வையிட்டார்.
இதனை அடுத்து சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் போலீஸ் பிணையில் நேற்றே விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கி இருந்து சிச்சை பெற்றவர்கள் அனைவரும் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு வீடுகளுக்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது