காணி, பொலிஸ் அதிகாரங்களுக்கு வாக்கெடுப்பு நடாத்த தயாரா நாமல் ராஜபக்ச – சபா குகதாஸ் கேள்வி

காணி, பொலிஸ் அதிகாரங்களுக்கு வாக்கெடுப்பு  நடாத்த தயாரா நாமல் ராஜபக்ச என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச  வடக்கு இளைஞர்களில் ஒரு பகுதியினர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை என கைவிட்டுள்ளனர் என கூறியதுடன் பெரமுன ஒரு போதும் மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்காது எனவும் தெரிவித்துள்ளார்.
நாமலின் தந்தை மகிந்த ராஜபக்ச யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவிற்கு பதின்மூன்று பிளஸ் வழங்குவேன் என உத்தரவாதம் கொடுத்ததை யுத்த முடிவின் பின்னர் பதின்மூன்று பிளஸ் பிளஸ் என பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடாத்தியதையும் மறந்திருக்கமாட்டார்.
மகிந்த ராஜபக்ச தமிழர்களை ஏமாற்றியதன் விளைவை 2015 ஆண்டு  ஜனாதிபதி தேர்தலில் கற்றுக் கொண்டதை மறந்து விடமாட்டார்.
வடக்கு மாகாணசபை தேர்தல்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்பின் உச்சம்  2013 ஆண்டு புள்ளடி மூலம் காட்டப்பட்டது அதன் வெளிப்பாடு தமக்கான காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குமாறுதான் இதனை நாமல் ராஜபக்ச நினைவில் கொள்ள வேண்டும்.  2019 ஆண்டு ஐனாதிபதி தேர்தலில் மொட்டுச் சின்னத்திற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கொடுத்த தீர்ப்பை உலகமே அறியும்.
தமிழ் மக்களை பிரித்தாளும் எண்ணங்களை கை விட்டு முடிந்தால் நாமல் ராஜபக்ச அவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு வாக்கெடுப்பை நடாத்துங்கள் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வேண்டுமா? வேண்டாமா? என்று அதில் தெரியும் உண்மை என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews