அநுரகுமார திசநாயக்க ஆட்சியில் இந்திய-இலங்கை உறவு? -ஐ.வி.மகாசேனன்

அனுரகுமார திசநாயக்கவின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையில் இடதுசாரி மரபுடைய கட்சியின் ஆட்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திடப்பட்டுள்ளது. இலங்கை ஊடகங்களும் அவ்வாறான ஒரு விம்பத்தையே பிரதிபலிக்கின்றது. எனினும் சில அரசியல் ஆய்வாளர்கள் ஜே.வி.பி.யின் இடதுசாரி தத்துவத்தை கேள்விக்கு உட்படுத்துவதனையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. அதேவேளை கட்டமைக்கப்படும் இடதுசாரி விம்பம், இலங்கைக்கு பிராந்திய மற்றும் சர்வதேச நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்ற ஊகங்களும் சில செய்திகளில் சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளின் தூதரக செயற்பாடுகள் இராஜதந்திரத்தின் ஆரம்பப்படிமுறையில்  இருப்பதனையே சுட்டிக்காட்டுகின்றது. சமகால சர்வதேச ஒழுங்கும், பனிப்போர்க்கால கருத்தியல் மோதலை தொடர்வது இல்லை. மாறாக கருத்தியல்கள் கலந்து சங்கமிக்கும் நிலைமைகளையே அவதானிக்க கூடியதாக உள்ளது. தூய சோசலித்தையோ அல்லது தூய முதலாளித்துவத்தையோ அரசியல் கட்டமைப்புகளில் அவதானிக்க முடியாது. இக்கட்டுரை இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மற்றும் பிராந்திய-சர்வதேச அரசுகளின் இராஜீக நடாத்தையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட புதிய ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து, கடந்த வாரம் இலங்கைக்கான பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களை சந்தித்து, புதிய அரசாங்கத்துக்கான வாழ்த்துகளையும் தொடர்ச்சியான இருநாட்டு ஒத்துழைப்புகள் தொடர்பிலான உறுதிப்பாடுகளையும் வழங்கி இருந்தார்கள். குவாட் நாடுகளான இந்தியாவின் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அமெரிக்க உயர் ஸ்தானிகர் ஜூலி சங், ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன்ஸ் ஆகியோரும் சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ. ஷென்ஹொங் சந்திப்பும் சர்வதேச அரசியலில் முக்கிய கவனத்தை பெற்றிருந்தது. அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர்-04) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். புதிய ஆட்சி மாற்றத்தில் முதலாவது வெளிநாட்டு உயர் அதிகாரியின் விஜயமாக இது அமைந்திருந்தது.

புதிய ஆட்சித் தலைவர்கள் தமது முதலாவது விஜயத்தை தமது நெருங்கிய நட்பு அரசுக்கு விஜயம் செய்வது சர்வதேச அரசியல் வழமையாகும். அமெரிக்க ஜனாதிபதிகள் ஐரோப்பாவிற்கு தமது முதலாவது விஜயத்தை மேற்கொள்வது மரபாகும். இலங்கை அரச தலைவர்கள் இந்தியாவிற்கான விஜயமும், இந்தியா முதலாவதாக அழைப்பு விடுவதும் மரபாகும். கடந்த காலத்தில் சீன சார்புடையவர்களாக கருதப்படும் ராஜபக்சாக்களின் ஆட்சியதிகாரத்திலும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாகவும் இந்தியாவே அமைந்துள்ளது. தென்னாசியாவில் நட்புறவு கொண்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் எப்போதும் புதுடில்லியை தங்கள் முதல் விஜயமாகக் கொண்டாலும், கடந்த சில மாதங்களாக மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு மற்றும் பங்களாதேஷின் இடைக்கால அரச தலைவர் முஹம்மது யூனுஸ் ஆகியோரால் பாரம்பரியம் முறியடிக்கப்பட்டது. இப்பின்னணியிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம், ஒப்பீட்டளவில் அறிமுகமில்லாத இலங்கை அரச தலைவரை இந்தியாவிற்கு வரவேற்பதாகும். ஆனால் இந்த ஆண்டு நவம்பர்-14ஆம் திகதி திட்டமிடப்பட்ட இலங்கை பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் இந்த விஜயம் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்லுக்கு முன்னரும், 2024-பெப்ரவரியில் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினரை இந்தியா அழைத்து விஜயம் மேற்கொண்டிருருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடனான சந்திப்புகளை மேற்;கொண்டிருந்தர். மேலும் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி குழு விஜயம் செய்திருந்தது. குறிப்பாக இந்தியாவில் இடதுசாரி கட்சியினுடைய ஆட்சி இடம்பெறும் கேரளா மாநிலத்திற்கும் சென்றிருந்தார்கள். அங்கிருந்து இலங்கைக்கு திரும்பியிருந்தார்கள். அன்றைய காலப்பகுதியில் இந்தியாவிற்கான ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குழுவின் விஜயம் இலங்கை அரசியலில் அதிக பரபரப்புக்களை உருவாக்கியது. இச்சம்பவம், ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசநாயக்கவின் வெற்றிக்கான வாய்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளிடையே அதிக அச்சத்தை உருவாக்கியதும் எனலாம்.

ஜே.வி.பி மற்றும் அநுரகுமார திசநாயக்க மீதான இந்தியாவின் கரிசனை, கடந்த கால ஜே.வி.பி-யின் இந்திய எதிர்ப்புவாதம் மற்றும் ஜே.வி.பி மீது கட்டமைக்கப்பட்டுள்ள மாக்சிச மரபு சார்ந்தே காணப்படுகின்றது. இலங்கையில் இந்திய முதலீடுகள் ஜே.வி.பி ஆட்சி காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகுமா என்ற சந்தேகங்கள் பொதுவெளியில் காணப்படுகின்றது. இந்திய வெளிவிவகார அமைச்சர் 2024-ஜூன் கொழும்பிற்கு வருகை தந்தபோது, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் இந்தியாவின் ஆதரவுடன் எரிசக்தி மற்றும் இணைப்புத் திட்டங்களை மதிப்பாய்வு செய்யப்பட்டது. அநுரகுமார திசநாயக்க நிர்வாகத்தில் திட்டங்கள் மீளாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சார காலப்பகுதியில், வடக்கு-கிழக்கில் உள்ள அதானி மின் திட்டத்தை ரத்து செய்வதாக அநுரகுமார திசநாயக்க மற்றும் ஜே.வி.பியினர் தெரிவித்து உள்ளனர். உள்ளூர் சுற்றுச்சூழல் குழுக்கள் ஏற்கனவே இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் கவலைகளை மேற்கோள் காட்டி இந்தத் திட்டத்தை சவால் செய்துள்ளன. தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்திய ஊடகமான வுhந ர்iனெர நாளிதழிற்கு அநுரகுமார திசநாயக்க அளித்த நேர்காணலில், ‘தனியார் துறை உட்பட வெளிநாட்டு மூலதனத்தை நாங்கள் வரவேற்கிறோம்.  ஆனால் அனைத்து முதலீடுகளும் நியாயமான விலை கோரல் செயல்முறையின் மூலம் வர வேண்டும். அதானி கிரீன் வழங்கிய கூ0.0826 அல்லது 8.26 சென்ட்களை ஒரு கிலோவாட்-மணிநேரத்திற்குக் குறிப்பிடுகிறார்.  நியாயமான விலை கோரல் நடைமுறைக்கு அரசு சென்றிருந்தால், பாதி விலைக்கு நாங்கள் வாங்கியிருக்கலாம்.’ எனத்தெரிவித்துள்ளார். எனவே மறுசீரமைப்பு தவிர்க்க முடியாதது என்பதே சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ள நிலையில், அமைச்சரவை தீர்மானம் பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் பொதுத்தேர்தலுக்கு பின்னர் இந்தியாவின் திட்டங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற சாரப்பட கருத்துரைத்திருந்தார். இது இந்திய வெளிவிவகார அமைச்சரின் உரையாடலை ஒருவகையில் முன்கூட்டியே இலங்கை அரசாங்கம் தனது விருப்புக்குள் திட்டமிடும் இராஜதந்திர உத்தியாகவும் அவதானிக்கப்படுகின்றது.

புவிசார் அரசியல் மூலோபாயத்தை பகிருகின்ற அரசாக இலங்கை அமைகின்றது. இந்தபின்னணியிலேயே இலங்கையின் ஆட்சி மாற்றங்கள், சர்வதேச அரசியலில் அதிக கவன குவிப்பை பெறுகின்றது. அதிலும் 2024ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் இடதுசாரி விம்ப பாரம்பரியத்தை கொண்ட ஜே.வி.பி-யின் தலைவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளமை, இலங்கையின் வெளியுறவுக்கொள்கை தொடர்பில் பிராந்திய சர்வதேச அரசுகளில் அதிக விவாதத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்திய ஊடகங்கள் அநுரகுமார திசநாயக்கவின் வெற்றி தொடர்பில்  அதிகளவில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்தபின்னணியில் ஈழத்தமிழர் அரசியல் மீதான கவனக்குவிப்பும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் ஈழத்தமிழர்களின் அரசியல் சக்திகள், தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய வலுவில் உள்ளார்களா என்பதையும் சந்தேகத்துடனேயே ஆராய வேண்டியுள்ளது. எனினும் அநுரகுமார திசநாயக்க நிர்வாகத்தில் பிராந்திய அரசுடனான வெளியுறவுக்கொள்கை ஆபத்தான நிலைக்கு செல்லுமா என்பதையும் நுணுக்கமாக ஆராய வேண்டி உள்ளது.

முதலாவது, இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் அயல்நாடுகளுடன் வலிந்து நட்பை பராமரிக்கும் இயல்பையே பின்பற்றி வந்துள்ளது. குறிப்பாக இலங்கையுடான இந்தியாவின் கடந்த கால வெளியுறவு அத்தகைய இயல்பையே பிரதிபலிக்கின்றது. இந்திய இலங்கையுடனான உறவில், ‘சாம் தான் பேத் தண்டம்’ ஆகிய நான்கு இராஜதந்திர பொறிமுறைகளில் முதலிரண்டையுமே சமகாலத்தில் முதன்மைப்படுத்தி வருகின்றது. கோத்தபாய ராஜபக்சவின் நிர்வாகத்தில் இலங்கை சீனாவுடனேயே அதிக நட்பினை பாராட்டியது. இந்திய முதலீடுகளை மறுசீரமைப்பு செய்தது. குறிப்பாக கொழும்புத்துறைமுக கிழக்கு கொள்கலன் முனையம் இந்திய-இலங்கை இராஜீக உறவில் நெருக்கடியை உருவாக்கியது. எனினும் இலங்கை கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கப்பல் விபத்து மற்றும் வரலாறு காணாத இலங்கை பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் இந்தியாவே முதலில் உதவிகளை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியான அணுகுமுறை பிரதிபலிப்புக்களையே தற்போதும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அநுரகுமார திசநாயக்கவைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கொழும்பைச் சேர்ந்த முதல் இராஜதந்திரி, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ; ஜா ஆவார். செப்டெம்பர்-22அன்று இரவு இறுதி முடிவு தேர்தல் திணைக்களத்தால் உறுதிசெய்யப்பட்டு, அநுரகுமர திசநாயக்க வெற்றி பெற்றுள்ளமையை அறிவித்ததை  தொடர்ந்தே, நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார். அவ்வாறே பிரதமராக ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே சந்தித்து, புதிய அரசாங்கத்தின் வெற்றிக்காக வாழ்த்தினை தெரிவித்திருந்தார். இது இலங்கை உறவில் இந்தியாவின் ‘சாமம் (சமாதானம்)’ அணுகுமுறையையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இரண்டாவது, அநுரகுமார திசநாயக்க அரசாங்கமும் இந்திய சார்ந்து மென்போக்க அரசியலையே ஆரம்ப சமிக்ஞைகளில் வெளிப்படுத்தியுள்ளது. ஸ்தாபக ஜே.வி.பி இயல்புகளில் இந்திய மீது வன்போக்கான இயல்புகளே காணப்பட்டது. ஜே.வி.பி-யின் 1987-1989ஆம் ஆண்டு இரண்டாவது புரட்சி முழுமையாக இந்திய எதிர்ப்புவாதத்தை மையப்படுத்தி இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இக்காலப்பகுதியிலேயே இலங்கையின் இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க மாணவனாக ஜே.வி.பி புரட்சியில் இணைந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது சொல்லிலும், செயலிலும் 1987ஆம் ஆண்டு அநுரகுமர திசநாயக்கவின் நடத்தையை அவதானிக்க முடியவில்லை. பிராந்திய அரசாக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்டராகவே காணப்படுகின்றார். 2024-பெப்ரவரியில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக காணப்படுகையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டமை, இந்தியாவுடன் இணைந்து செல்வதற்கான முன்சமிக்ஞையையே உணர்த்தியுள்ளது. அத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி. ஹரிணி அமரசூரியாவின் இளங்கலைமானி பட்டப்படிப்பை இந்தியாவின் டெல்லி பல்லைக்கழகத்திலேயே நிறைவு செய்துள்ளார். காலனித்துவ காலத்தில் மேற்கு நாடுகளில் கல்வி கற்று வந்த மத்தியதர வர்க்க எழுச்சியே இலங்கையில் சுதந்திரத்தை கோரியிருந்தது. எனினும் மேற்கு அரசியல் தத்துவங்களுக்குள்ளேயே அவர்களது பயணம் கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்திய பல்கலைக்கழக முதல் பட்டக் கற்கையை நிறைவு செய்துள்ள ஹரிணி அமரசூரிய இந்திய எதிர்ப்புவாதத்தை நடைமுறைப்படுத்தக்கூடியவராக காணப்படுவரா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. அத்துடன் ஹரிணி அமரசூரிய மரபார்ந்த ஜே.வி.பி-யை சார்ந்தவர் இல்லை. மாறாக தேசிய மக்கள் சக்தியினூடாக இணைந்து கொண்ட உயர்வர்க்கத்தை சேர்ந்தவர். இப்பின்னணி தேசிய மக்கள் சக்தி இந்திய எதிர்ப்புவாதத்திலிருந்து விலகி உள்ளமையையே உறுதி செய்கின்றது.

மூன்றாவது, சமகால உலக ஒழுங்கில் கருத்தியல் கலப்பு சர்வ சாதாரணமாகி உள்ளது. பனிப்போர்க்கால கருத்தியல் மோதலுக்கு பின்னர், ஒற்றைi மைய அரசியலில் இடதுசாரியும் வலதுசாரியும் தமது நலன்களை ஈடேற்றி கொள்ள இணைந்து இணங்கி செல்லும் அரசியல் ஒழுங்கே சமகாலத்தில் காணப்படுகின்றது. இடதுசாரி பாரம்பரியத்தை கொண்ட ஜே.வி.பி அரசாங்கத்துடன், வலதுசாரி அரசியல் மரபையுடைய இந்திய அரசாங்கத்தால் ஒன்றிணைந்து பயணிக்கக்கூடிய சர்வதேச எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றது. பிரேசிலில் 2022ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, லுலா டா சில்வா எனும் இடதுசாரி பாரம்பரியத்தை கொண்டவர் மூன்றாவது முறையாக அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் லூலாவின் பிரச்சாரத்தின் போது லூலாவை ஆதரித்தது. தீவிர வலதுசாரி தலைவரான போல்சனாரோவை அதிகாரத்தில் இருக்க அரசியலமைப்பிற்கு விரோதமான தலையீடுகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரித்தது. கருத்தியல் பற்றிய வாதங்கள் சமகாலத்தில் மலினப்பட்டதாகும். இது இந்திய-இலங்கை உறவில் ஜே.வி.பி-யின் இடதுசாரி பாரம்பரியம் பாரிய நெருக்கடியை உருவாக்க போவதில்லை.

எனவே, இலங்கை-இந்திய உறவில் காணப்படும் பதட்டமான செய்திகள் பரந்த மாயைகளுக்குள் கட்டமைக்கப்பட்டதாகவே அமைகின்றது. அநுரகுமார திசநாயக்க தலைமையிலான நிர்வாகத்துடனான இந்திய இராஜீக உறவு ராஜபக்ச அரசாங்கத்துடன் பெற்றிருந்த அனுபவத்திற்குள் பயணிக்கக்கூடியதாகும். மாக்ஸிச மரபு எனும் செய்தி தலைப்புக்களே அதிக பிரம்மைகளை உருவாக்கியது எனலாம். மறுதலையாக அநுரகுமார திசநாயக்க அரசாங்கம் சர்வதேச ரீதியான இராஜீக உறவை இலங்கை அரசின் பாரம்பரியத்திலிருந்து திட்டமிடுவதனையே ஆரம்ப நாட்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இது தென்னிலங்கை அரசியலில் 2015ஆம் ஆண்டு அரசியல் காலச்சூழலையே பிரதிபலிக்கிறது. தென்னிலங்கை, 2012களுக்கு பிறகு சர்வதேச ரீதியாக ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடியை மலினப்படுத்த 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. அவ்வாறே 2022ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய அநுரகுமார திசநாயக்கவை அதிகாரத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவே அரசியல் அவதானத்தில் வெளிப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews