2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் தேசியம் தேய்வடைந்து செல்கின்றது – வசந் கவலை!

நாங்கள் ஒரு தொன்மை வாய்ந்த இனம். எங்களுடைய மொழி தொன்மை வாய்ந்த மொழி. எமக்கு என்று ஒரு தனித்துவமான கலாசாரம் உள்ளது. எம்முடைய வடக்கு – கிழக்கு இவற்றையெல்லாம் நாங்கள் பாதுகாத்துக்கொண்டு நாங்க ஒரு தேசமாக எழுவோமேயானால் அதுதான் தமிழ் தேசியம் என யாழ். பல்கலைக்கழகத்தின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் பு.வசந் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்ற ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அரசியல்வாதிகள், தமிழ் தேசியம் குறித்தான விளக்கங்களை அல்லது தெளிவூட்டல்களை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதில்லை. அந்த வகையில் தமிழ் தேசியமானது இப்பொழுது எந்த செல்கதியில் செல்கின்றது? உண்மையில் 2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் தேசியம் ஆனது தேய்வடைந்து கொண்டு செல்கின்றது.
2009க்கு முன்னர் எங்களிடம் திட்டமிட்ட ஒரு பொருளாதாரக் கொள்கை இருந்தது. திட்டமிட்ட ஒரு அரசியல் கொள்கை இருந்தது. திட்டமிட்ட கலை, பண்பாட்டு நிகழ்வு சம்பந்தமாக கலாசாரத்தை வளர்ப்பதற்கான விடயங்கள் இருந்தன. வரலாற்றை பேணுவதற்கு ஒவ்வொரு துறைகள் இருந்தன. ஆனால் நாங்கள் 2009க்கு பின்னர் அனைவரும் சிதறிப் போய் இருக்கின்றோம்.
இதுவரை காலமும் தமிழ் தேசியப் பரப்பிலே, தமிழ் தேசிய அரசியல்வாதிகள் முன்னெடுத்த குறைபாடான செயல்பாடுகளால் தான் இன்றைய தமிழ் தேசிய அரசியலில் மக்கள் அதிருப்தியுடன் இருக்கின்றனர். தமிழ் தேசியம், தமிழ்த் தேசியம் என கூறிக்கொண்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை மறந்து விட்டார்கள்.
இன்று பிறப்பு வீதம் குறைவடைந்து இருக்கின்றது. வேலையற்றோருடைய வீதம் அதிகரித்திருக்கின்றது. வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றோரது தொகை அதிகரிக்கிறது. இதை தடுக்காமல் நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது.
எங்களுடைய உரிமை அரசியல் வேண்டும், எங்களுக்கு சமஸ்டி வேண்டும், எங்களுக்கு தனி நாடு வேண்டுமென்றால் நாங்கள் அடிக்கட்டுமானங்கள் அனைத்தையும் பலப்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews