பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டு விநியோக்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் (21.10.2024) நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த சனாதிபதித் தேர்தல் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவித்து, தபால் மூலமான வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுக்கள் மற்றும் உரிய ஆவணங்களை பொதியிட்டு விநியோகிக்கும் கடமையானது ஒரு குழுக்கடமையாகும் என்பதால் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்கள் வினைத்திறமையாக செயற்பட்டு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு கடமைகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான
கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டு விநியோகிக்கும் கடமையில் ஈடுபடவுள்ள பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.