ஜனநாயக தமிழரச கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு கட்சியை உருவாக்கி நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வர வேண்டிய சூழ்நிலையை இலங்கை தமிழரசு கட்சி ஏற்படுத்தியிருக்கின்றது. நாங்கள் விரும்பி வெளியில் வரவில்லை என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவரை இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
16 ஆண்டுகள் தமிழரசு கட்சியின் உள்ளே இருந்தேன். இதன்போது மத்திய குழு, அரசியல் குழு மற்றும் சட்டக் குழுவின் பல குழுக்களில் இருந்தேன். கட்சிக்கு வரும் வழக்குகளுக்கும் நான் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தேன். அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது வழக்குகளில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அரசியல் கைதிகளின் வழக்குகளில் நான் ஆஜராகி உள்ளேன். வாதாடிய வழக்குகளில் எவருமே சிறை செல்லவில்லை.
இலங்கை தமிழரசு கட்சியானது தற்போது ஒரு தனி நபருடைய கம்பனியாக மாறி இருக்கின்றது. அந்த நபர் இவ்வாறு சர்வதிகாரம் மிக்க நிலையில் செயல்படுவதற்காக தலைமைத்துவமும், சம்பந்தரும் காரணமாக உள்ளனர். கட்சிக்குள் இருந்த அனைவரையும் விலக்கிவிட்டு தனது தனியான கட்டுக்கோப்புக்குள் கட்சியை வைத்திருக்கின்றார்.
கட்சியின் தலைவர் தேர்தலில் சிறீதரன் அவர்கள் வெற்றி பெற்றிருந்தார். இருந்தாலும் அவருக்கான பதவி வழங்கப்படாது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது.
தமிழ் தேசியம் தான் எமது தமிழரசு கட்சியின் தாரகை மந்திரம். தமிழ் தேசியமானது பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் இல்லாவிட்டாலும் கூட அடுத்த தலைமுறையிடம் அதனை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும். ஆனால் தமிழரசு கட்சிக்குள் அது நடைபெறவில்லை.
கட்சிக்குள் இத்தனை பேர் இருந்தும் ஏன் எதனையும் செய்யவில்லை என நீங்கள் கேட்க கூடும். கட்சிக்குள் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதவிகளுக்கான ஆசைகளில் இருந்தார்கள். மாகாண சபை தேர்தல் வந்தால் அந்த தேர்தலில் முதலமைச்சர் யார், அமைச்சர்கள் யார், பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் யார் என அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு விட்ட நிலையில் அவர்கள் அனைவரும் அமைதியாகி விட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தான் கட்சியை நடத்த முடியாது என நான் வெளியேறி வந்தேன்.
நான் ஆறாம் திகதி கட்சியை விட்டு வெளியேறி வந்த பின்னர் பலர் என்னிடம் கேட்டார்கள் ஏன் கட்சியை விட்டு வெளியேறினீர்கள், கட்சிக்கு உள்ளே இருந்து சரிசெய்திருக்கலாம் தானே என்று. எட்டாம் திகதி தலைவர், தான் வகித்த சகல பதவிகளிலும் இருந்து விகுகின்றார். இது ஒருவருடைய சர்வாதிகாரப் போக்கை காட்டுகின்றது.
கட்சியின் செயலாளர் பதவியினை சுமந்திரன் கோரினார். ஆனால் அவருக்கான பலவி மறுக்கப்பட்டது. இதன் போது சுமந்திரன் அவர்கள் நாங்கள் இரண்டு அணி என கூறினார். இப்போது தேர்தல் வரும் பது நாங்கள் ஒரு அணி என கூறுகின்றார். வீட்டுக்குள் என்ன நடக்கின்றது.