மாகாணசபை சபை முறைமை மூலம் பின்தங்கிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வழி வகுப்போம் – சந்திரசேகரன் தெரிவிப்பு!

தென் பகுதியில் இருந்து வருகை தந்த சகோதர மொழி பேசும் இளைஞர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணம் – அரியாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது சந்திரசேகரன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
மாகாணசபை தொடர்பிலான முன்மொழிவுகளை எடுத்துவந்த தென் இலங்கை இளைஞர்கள் எம்மை வந்து சந்தித்தார்கள். அந்த சந்திப்பில் அவர்கள், தென் இலங்கையில் மாத்திரம் அல்ல, முழு நாட்டிலும் இருக்கின்ற சாதாரண பாமர மக்கள் மாகாண சபை தொடர்பாக என்ன சிந்திக்கின்றார்கள், எவ்வாறான மாற்றங்களை கொண்டுவர வேண்டும், தங்களுடைய பிரச்சினை என்ன என்பதனைப் பற்றி ஆய்வு செய்து அந்த ஆய்வினைப் பற்றிய அறிக்கையை சகல கட்சிகளுக்கும் கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்கின்றார்கள்.
அவர்களுடன் நாங்கள் கருத்துப் பகிர்வில் ஈடுபட்டவேளை இந்த மாகாணசபை முறைமை தொடர்பாகவும், அதன்மூலம் தீர்வுகள் எட்டப்படுமா, எட்டப்படாதா, அது குறித்து எவ்வாறான நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தி கொண்டுள்ளது என்பது குறித்தும் அவர்களுடன் விரிவாக பேசப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும், இந்த இளைஞர்களால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கை என்பது கீழ்மட்ட மக்கள் மத்தியில் சென்று, அவர்களுடன் உரையாடுதல், அந்த உரையாடல்கள் முலம் அவர்களுடைய பிரச்சினைகளை இனங்கண்டு, அந்தப் பிரச்சினைகளை அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்தல் என்பது வரவேற்கத்தக்க விடயம்.
அதனடிப்படையில் எதிர்காலத்தில், சாதாரண மக்களுடைய பிரச்சினைகள் பற்றி தெரியாத, விளங்காத அரசியல்வாதிகளுக்கு இது ஒரு புலப்பாடாக அமையும் என நாங்கள் நம்புகிறோம்.
எதிர்வரும் காலங்களில், இந்த இளைஞர்கள் முன்வைக்கின்ற கருத்துக்களையும் உள்வாங்கி, பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசி, அவர்களது பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான கவனத்தை செலுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews