புதிய ஜனாதிபதி தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவார் – கலாநிதி சிதம்பரமோகன் நம்பிக்கை!

இதுவரை காலமும் ஏற்பட்டிருந்த வேதனைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் தேர்வினை வழங்குவார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி சார்பில் மக்கள் தெரிவு செய்துள்ளதாக ஐக்கிய இடதுசாரி கூட்டணியின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்துள்ளார்.
நேற்றுமாலை வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்திலேயே இந்த நாடு நிர்மூலமாக்கப்பட்டது. அவருடைய திறந்த பொருளாதார கொள்கை காரணமாக, சம உடமை பொருளாதாரத்துடன் விவசாயத்தை முன்னிறுத்தி இருந்த நாடு எங்கள் இறக்குமதி பொருளாதாரத்தை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளால், இலங்கை முழுவதும் இருந்த தமிழ் மக்கள் கட்டிய உடையுடன் வடக்கு மாகாணத்திற்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அத்துடன் மலையகத்தில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் வடகிழக்கிற்கும் இந்தியாவிற்கும் புலம்பெயர் வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதன்போது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெவர்த்தன அவர்கள் மலையகத்தின் சிரேஷ்ட தலைவரான தொண்டமானிடம் கேட்ட ஒரு கேள்வி யுத்தமா சமாதானமா என்று. ஒரு பொறுப்பு மிக்க நாட்டின் ஜனாதிபதி தமிழ் மக்களை கேட்ட கேள்வி தான் யுத்தமா சமாதானமா என்று.
அதன்பின்னர் தமிழ் மக்கள் தாங்கள் பிரிந்து போவதற்கு காரணமாக இருந்தது ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையும் தான். அதன்பின்னர் 1983 ஆம் ஆண்டு இலங்கையில் மூன்று கட்சிகள் தடை செய்யப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணி, நவசவமாஜ கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் வன்செயலுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாத நிலையில் தடை செய்யப்பட்டன. அன்றிலிருந்து ஏறக்குறைய 17 வருடங்கள் இடதுசாரிகள் இந்த நாட்டில் பாரிய துன்பத்தை எதிர்கொண்டார்கள்.
இவற்றுக்கு எல்லாம் பின்னர் வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு ஒரு கதையையும் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு ஒரு கதையையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அத்துடன் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் அரசியல்வாதிகள் ஒரு நிரந்தர தீர்வான அரசியலை செய்யாத நிலையில், அவர்கள் சர்வதேசத்தை மாத்திரம் நம்பி இருந்த நிலையில் சிங்கள மக்களிடம் தங்களது பிரச்சினையை கொண்டு செல்லாத நிலையும் இருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில் தான் இந்த நாட்டில் எது நடக்க வேண்டும் என சிங்கள மக்களும் சிங்கள விவசாயிகளும், தமிழ் மக்களும் தமிழ் விவசாயிகளும் விரும்பினார்களோ அவ்வாறான ஒரு இடதுசாரி கட்டமைப்பை கொண்ட ஜனாதிபதி தெளிவாகியுள்ளார். இந்த தெரிவு நாட்டில் மிகப் பெரிய ஒரு மாற்றத்தை மட்டுமல்ல மிகப்பெரிய ஒரு எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, பல்தேசிய கம்பெனி ஆகியவற்றினால் எமது நாட்டின் வளங்கள், சொத்துக்கள் அனைத்தும் சூறையாடிக்கொண்டிருந்து நிலையில் இறுதிக்காலத்திலாவது இலங்கை மக்களுக்கு ஒரு சுதந்திரம் கிடைத்திருக்கின்றது என நான் நம்புகின்றோம். எமது நாட்டின் வளங்கள் சூறையாடப்படுவதற்கும் சொத்துக்கள் அழிப்பதற்கும் எதிராக செயல்படக்கூடிய ஜனாதிபதியாக எமது ஜனாதிபதி அநுர செயல்படுவார் என நம்புகின்றோம்.
இந்த நாட்டின் ஏழை மக்களின் காணியை சுவீகரிப்பதற்காக 87ஆம் ஆண்டு அரச காணிகள் மீறப்பெறுதல் சட்டத்தின் 7வது உப பிரிவை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்து. இதன்மூலம் மலையக மக்களுக்கு இருந்த காணி உரிமை பறிமுதல் செய்யப்பட்டது. வடகிழக்கில் இருந்த மக்களது சொந்த காணிகள் இல்லாது செய்யப்பட்டது.
அடுத்ததாக மகாவலி சட்டம் கொண்டுவரப்பட்டு காணிகள் பறிக்கப்பட்டது. ஒரு அங்குலம் காணி கூட வடக்கு கிழக்கில் இருக்கின்ற மக்களுக்கு வழங்கப்படவில்லை. இது கவலைக்குரிய விஷயம். இவ்வாறான பின்னணியில் தான் தமிழர் இளைஞர்கள் 30 வருடங்கள் ஆயுதம் தூக்க வேண்டிய ஒரு பின்னணி ஏற்பட்டது.
வடக்கு கிழக்கிலே இலட்சக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் அழிந்து விட்டார்கள். எங்களுடைய செல்வங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். பலர் அங்கவீனர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் ஒரு ஐந்து சதவீதங்களேனும் இந்த மக்களுடைய பொருளாதார அபிவிருத்தியோ அல்லது மன ரீதியான அபிவிருத்தியோ ஏற்படவில்லை. வீதி அபிவிருத்திகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். அது உண்மை, ஆனால் அதன் மூலம் தமிழ் மக்களுடைய அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஆகக் குறைந்தது திம்பு மாநாட்டின் கோட்பாட்டின்படியாவது அந்த நாலு அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கலாம். வடக்கு கிழக்கு இணைந்து ஒரு மாகாண சபை முறைமை நிறைவேற்றப்பட்டிருக்கலாம். அந்த மக்களுக்கு ஒரு சுய நிர்வாக கட்டமைப்பாவது ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இவை இவை நிறைவேற்றப்படாத நிலையில் 30 வருட யுத்தத்தைப் போலவே தமிழ் மக்கள் இப்பொழுதும் வேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அல்லது ஈடுபடாத தமிழ் இளைஞர் யுவாதிகள் பயங்கரவாத தடை சட்டத்தின் மூலமாக கைது செய்யப்படுகின்றார்கள். அவர்கள் இன்றும் சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எடுத்த வழிமுறை சரி பிழை என்பதற்கு அப்பால் தமது இந்த மண்ணிற்காக போராடினர்கள்.
இதுவரை காலமும் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்வதாக கூறிய எந்த ஒரு ஜனாதிபதியும் இதுவரை விடுதலை செய்யவில்லை. இவ்வாறான சூழ்நிலையில்தான் இந்த 2024 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியாக இருந்து மாற்றம் பெற்ற தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியானது தென் இலங்கையில் இருந்த ரணில் – ராஜபக்ச அரசின் கொடூரமான ஆட்சிக்கும், பொருளாதார சுரண்டல்களுக்கும், ஏகாதிபத்திய தாக்கத்திற்கும் எதிராக அழிக்கப்பட்ட வாக்குகளின் வெற்றி. அதுபோல வடக்கு இலங்கையில் தமக்கு ஏற்பட்ட அத்தனை தோல்விகளுக்கும் கடந்த கால ஜனாதிபதிகளாலோ பிரதமர்களாலோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாலோ எந்தவிதமான நீதியும் கிடைக்கப் பெறாத நிலையில் அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து உள்ளார்கள். எனவே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா அவர்கள் தமிழர்களது எதிர்பார்ப்பை நிச்சயமாக நிறைவேற்றுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews