தமிழர்களுக்கு காட்டு வாழ்க்கை ஆனால் அவர்களின் நிலங்களில் இராணுவம் இராஜ வாழ்க்கை!

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சிறு கிராமமான கேப்பாபுலவு மக்கள், நாட்டின் புதிய பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது நிலங்களை மீண்டும் தம்மிடம் கையளிக்குமாறு கோரியுள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களை மீளப்பெற்று அங்கு தமது வாழ்விடங்களை அமைத்து வாழ்வாதாரங்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் தொடர்ச்சியாக அந்த மக்கள் உள்நாடு முதல் சர்வதேசம்வரை தமது பிரச்சினையை முன்வைத்து வருகின்றனர்.
நாட்டின் பிரதமரின் பார்வைக்கு அந்த விடயம் கொண்டுசெல்லப்பட்டு தமது அவல நிலையை அறிந்துள்ள நிலையில், அவர் உடனடியாக உறுதியான ஒரு முடிவை எடுத்து தமது நிலங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அதேவேளை, புதிய அரசாங்கம் தாங்கள் ‘மீள்குடியேற்றப்பட்டுள்ள’ இடத்தில் வசதிகளை செய்து தருவதாக கூறி தம்மை அங்கேயே தொடர்ந்து தங்கவைத்து விடுவார்களோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மிக நீண்டகாலம் கொடூரமாக நடந்த உள்நாட்டு யுத்தம் இரத்தக்களறியுடன் முடிவடைந்த பின்னரும், மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் தமிழர்கள், இலங்கை பாதுகாப்பு படைகளால் வலிந்து அபகரிக்கப்பட்ட தமது நிலங்களை மீட்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிகட்ட யுத்த காலத்தில், அவர்களது நிலங்கள் இலங்கை படைகளால் வலிந்து அபகரிக்கப்பட்டன. அந்த யுத்தத்திற்கு இப்போது ஆட்சியில் இருந்த கட்சியும் ஆதரவளித்திருந்தது.

அவ்வகையில் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் ’மாதிரி கிராமம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு இடத்தில் அதிலும் காட்டுப் பகுதியில் ஒரு இடத்தை சுத்தம் செய்து அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்த மாதிரி கிராமத்தின் மக்கள் ட்டரீதியாக தமக்கு உரித்தான நிலங்களை உடனடியாக விடுவித்து உரியவர்களிடம் கையளிக்க வேண்டும் என பிரதமரிடம் கையளித்துள்ள கடிதத்தில் கோரியுள்ளனர்.

அரச நிலைப்பாட்டின்படி கேப்பாபுலவு கிராமத்து மக்கள் ‘மீள்குடியேற்றம்’ செய்யப்பட்டுள்ளார்கள், ஆனால் உண்மை நிலை என்பது, அந்த நிலத்திற்கு உரிய குடும்பங்கள் தமது சொந்த நிலங்களிலிருந்து வலிந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
எதற்கெடுத்தாலும் ‘தேசியப் பாதுகாப்பு’ என்ற போர்வையில் நடவடிக்கைகளை முன்னெடுத்த மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் 2012 ஆம் ஆண்டு, கேப்பாபுலவு கிராமத்திலிருந்து வலிந்து வெளியேற்றப்பட்ட குடுமங்களை சீனியாமோட்டை என்ற பகுதியில் காட்டை ஓரளவுக்கு சீர் செய்து அங்கு குடியமர்த்தினர். அப்படி காட்டை அழிக்கும் போது பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

அதாவது, தமது பாரம்பரிய நிலங்களை மக்களிடம் கையளித்து அவர்கள் அங்கு சென்று தமது வாழ்விடங்களை அமைத்துக்கொண்டு, வாழ்வாதாரங்களை முன்னெடுக்க வழி செய்யாமலும் வலிந்து தமது நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ச்சியாக வந்த அரசுகள் அறிந்தும் அதை ஏற்க மறுத்து வருகின்றன.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டங்களில் பரந்துபட்டளவில் நிலங்களை இராணுவம் கபளீகரம் செய்து அங்கு கட்டடங்களை கட்டியுள்ளன. அதன் மூலம் அந்த நிலங்களுக்கு சட்டரீதியாக உரியவர்களுக்கான வாழ்விட, வாழ்வாதாரங்களை இல்லாமல் செய்வது மட்டுமல்லாமல், தொலைவிலுள்ள காட்டுப்பிரதேசத்தில் ஒரு பகுதியை சுத்தம் செய்து அங்கு தமது விருப்பத்திற்கு மாறாக குடியேற்றப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தொடர்ச்சியாக வனவிலங்குகள் மற்றும் இராணுவத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.

உலகளவில் ஒப்பீட்டளவில் முல்லைத்தீவு மாவட்டம் தான் மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. அங்கு இரண்டு சிவிலியன்களுக்கு ஒரு இராணுவம் என்ற நிலை உள்ளது. கேப்பாபுலவு மக்கள் வலிந்து குடியேற்றப்பட்ட மக்கள் மிகவும் அவலமான ஒரு நிலையில் வாழ்ந்து வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்த சமயத்தில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியாக காலஞ்சென்ற கலாநிதி சுபிநாய் நந்தி இருந்தார்.

இலங்கையில் பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்,  கேப்பாபுலவு மக்கள் கூட்டமைப்பினர் தமது வாக்குகள் தேவையென்றால், தமது நிலங்கள் திருப்பியளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளனர்.
உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த தனி நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உரிய 70 ஏக்கர் நிலங்களை விடுவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கையளித்துள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளன.

“இங்கு 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் காணிகள், 3 நபர்களுக்கு உரிய 11.5 ஏக்கர் காணிகள், 3 நபர்களுக்கு உரிய 75 ஏக்கர் காணிகள் (25 வீட்டுத்திட்டம்), 104 குடும்பங்களுக்கு சொந்தமான 84.5 ஏக்கர் காணிகள், 6 நபர்களுக்கு சொந்தமான 86 ஏக்கர் காணிகள். 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 25 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் கடற்கரையோரப் பிரதேசங்களில் மீனவ சமூகத்தினர் காலங்காலமாக மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதிகள் எல்லாம் கடந்த 50 ஆண்டுகளாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது”.

பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தாங்கள் தொடர்ந்து மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதாகவும், ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், முறையான குடியேற்றம் ஆகியவை இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளனர். கேப்பாப்புலவு மக்கள் எதிர்கொள்ளும் கடும் சிரமங்கள் ஐ நா உட்பட பல்வேறு அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி, ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு அவர்களது இன்னல்கள் குறித்து அறிக்கையிட்டிருந்தது.
“உலகத்திற்கு நாங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக ஒரு பொய் பரப்படுகிறது” என்று உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களில் ஒருவரான 43 வயதை உடைய சிவகுரு ஐங்கரமுத்து உதயகுமாரி மெனிக் பாமில் பேருந்து ஒன்றில் செல்லும் போது, தான் எங்கு கொண்டு செல்லப்படுகிறோம் என்பது தெரியாமலேயே பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவதாக ஊடக நிறுவனம் ஒன்றிடம் அவர் தெரிவித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போருக்கு பின்னர் மெனிக் பார்ம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர்கள் கேப்பாபுலவிலுள்ள தமது சட்டபூர்வமான சொந்த நிலங்களுக்கு அனுப்பப்படுவதற்கு பதிலாக, இலங்கையில் வடமேற்கே உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில், அரசுக்கு சொந்தமான வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டனர். ஏனென்றால் அவர்களது நிலங்களை இராணுவம் வலிந்து அபகரித்து தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, எனவே அவர்களால் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியுமா, இல்லையா, அல்லது ஏதாவது இழப்பீடுகள் அவர்களுக்கு இடைக்குமா இல்லையா என்பதை அறிய அவர்கள் காத்திருக்க வேண்டும்” என்று 2102 ஆம் ஆண்டு அவர்கள் தொடர்பிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்போது 2024இல் 12 ஆண்டுகள் ஆன பின்னரும் அவர்கள் ‘மீள்குடியேற்றப்பட்ட’ அந்த காட்டுப்பகுதியில் ஏழ்மை மற்றும் பாதுகப்பின்றி எவ்வித வசதிகளும் இல்லாமலும் வாழ்ந்து வருகிறார்கள்.
நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஹரிணி அமரசூரிய குறைந்தபட்சம் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். தமது நிலங்களுடன், தமது அடிப்படை வாழ்வாதாரங்களை அவர்கள் இழந்துள்ளனர். இதில் மீன்பிடியே அவர்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்தது.

அவர்கள் இப்போது குடியேற்றப்பட்டுள்ள ‘மாதிரி கிராமம்’ காட்டின் ஒரு பகுதியை சுத்தப்படுத்தி அங்கு வசிக்கும் இடமாகும். அவர்களுக்கான இடத்தை ஏற்படுத்தும் போது ஏராளமான மரங்கள் அந்த பகுதியில் வெட்டப்பட்டன. அங்கு அவர்கள் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல், சராசரிக்கும் குறைவான நிலையிலேயே வாழவேண்டிய சூழல் நிலவுகிறது.

“நாங்கள் சொல்லொணா சிரமங்கள், பிரச்சனைகள், சிக்கல்கள் மற்றும் வாழ்க்கைச் சுமையுடன் இங்கு வாழ்ந்து வருகிறோம்”.
எமக்கு எங்கள் நிலங்கள் மீண்டும் தேவை. நாங்கள் அரசின் ‘நலன்புரி முகாமில்’ பலவிதமான நெருக்கடிகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகளை எதிர்கொள்கிறோம். எனினும் எமக்கு மாற்று நிலங்கள் அல்லது இடங்கள் அளிக்கப்படுவது என்ற பேச்சிற்கே இடமில்லை. எமது பூர்வீக நிலங்கம் எமக்கு தேவை அவ்வளவே-அந்த விடயத்தில் மாற்று ஏற்பாடுகள், விளக்கங்கள் ஏதும் தேவையில்லை, என்று பிரதமரிடம் கையளித்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், தற்போதைய வடக்கு மாநில ஆளுநரே, அந்த காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த போது, தங்களை சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கு பதிலாக 24.09.2012 அன்று வலிந்து இந்த காட்டுப்பகுதியில் குடியேற்றினார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள்.

“நாங்கள் எமது சொந்த பூமியிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மறுபுறம், எமது சொந்த நிலங்களில் இராண்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். எமது பூர்வீக இடத்தை இராணுவத் தலைமையகமாக அறிவித்துள்ளனர். இத் ஊழல் இல்லையா? முந்தைய இராணுவத் தலைமையகம், இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எமது பூர்வீக நிலம் எப்போது இராணுவத் தலைமையகமாக இருந்தது? மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் எப்படி இராணுவப் பாதுகாப்பு தலைமையகத்தை அமைக்க முடியும்?” என அடுக்கடுக்கான கேள்விகளை பிரதமரிடம் கையளித்த கடிதத்தில் அவர்கள் வினவியுள்ளனர்.

தமிழர்களுக்கு சொந்தமான இடத்தில், ‘சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட நிலத்தில்’ இராணுவ பெரிய கட்டடங்களை கட்டியுள்ளனர். இப்போது அதையே காரணமாக் காட்டி, அந்த நிலத்தை, அதன் சட்டபூர்வமான உரிமையாளர்களிடம் கையளிக்க மறுக்கின்றனர். அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக தொடர்ச்சியாக வந்த அரசுகள், சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வந்துள்ளன. தாங்கள் வலிந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதியில் கழிப்பறை, சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த அடிப்படை வசதிகள் வாழ்க்கையில் அடிப்படை உரிமைகள் என்று பன்னாட்டு அமைப்புகள் வகைப்படுத்தியுள்ளன.

தமிழர்களுக்கு உரித்துடைய, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வளம் மிக்க பூமி எப்படி இராணுவத்தால் அபகரிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்கள் எவ்விதமான வசதிகளும் இல்லாத காட்டுப்பகுதிகளுக்கு விரட்டப்பட்டுள்ளனர் என்பதற்கு கேப்பாபிலவு ஒரு யதார்த்தமான உதாரணம் என்று உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகிறார்கள். மீள்குடியேற்றம் என்ற கண் துடைப்பில், எவ்விதமான வசதிகளும் இல்லாமல் தமிழர்கள் விடப்பட்டுள்ள நிலையில், அவர்களது நிலங்களை ’ஆக்கிரமித்துள்ள இராணுவம்’ அந்த நிலத்தின் பெறபேறுகளை அனுபவித்து வருகின்றனர் என்று மேலும் கூறுகிறார்கள்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூற்றுகளின்படி, தமிழர் தாயகப் பகுதியான வடக்குகிழக்கில் இன்னும் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பாதுகாப்பு படைகளின் வசம் உள்ளன.
“இது தான் ஒரு ஜனநாயக நாட்டில் நீதியா?” என பிரதமரிடம் கையளித்த கடிதத்தில் தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews