பின்னடைவு என்பது உண்மை தான் ஆனால் துவளக்கூடிய பின்னடைவல்ல….! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கம்.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியடைந்ததே இதற்கு காரணம். யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களையும் வன்னியில் இரண்டு ஆசனங்களையும் பெற்று இரு மாவட்டங்களிலும் முதன்மைக் கட்சியாக வந்துள்ளது. இது தேசிய மக்கள் சக்தியே எதிர்பாக்காத வெற்றியாகும். வாக்குகளை கணித ரீதியாக கணிப்பிட்டுப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய வாக்குகளை பெரிதாக உள்ளீர்;க்கவில்லை. தமிழ்த் தேசிய வாக்குகளுக்கு வெளியே இருந்த டக்ளஸ் தேவானந்தா, அங்கையன் இராமநாதன் ஆகியோரின் வாக்குகளையே உள்ளீர்த்திருக்கின்றது. தமிழ்த் தேசிய வாக்குகளில் 15,000 வரையிலான வாக்குகளையே உள்ளீர்த்திருக்கின்றது எனலாம்.


தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதனாலேயே அதிக ஆசனங்களை பெறக்கூடியதாக இருந்தது. வீட்டிற்கு விழுந்த வாக்குகளையும், சங்கிற்கு விழுந்த வாக்குகளையும், தவராசா தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வாக்குகளையும் சேர்த்து கூட்டினால் தேசிய மக்கள் சக்திக்கு விழுந்த வாக்குகள் குறைவானவை. இந்த மூன்று தரப்பும் பழைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்திருக்கும். போனஸ் ஆசனம் உட்பட மூன்று ஆசனங்கள் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும்.
தேர்தலில் தமிழரசுக் கட்சி 63,327 வாக்குகளையும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22513 வாக்குகளையும் தவராசா தலைமையிலான சுயேட்சைக் குழு 7,496 வாக்குகளையும் பெற்றிருந்தது. மூன்று தரப்பின் வாக்குகளையும் கூட்டினால் 93,336 கிடைத்திருக்கும். தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளையே பெற்றிருந்தது. இதனுடன் தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியும,; தமிழ் மக்கள் கூட்டணி பசுமாடு சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு என்பவற்றின் வாக்குகளையும் கூட்டினால் 135,870 வாக்குகள் கிடைத்திருக்கும.; இதன்படி ஐந்து ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் 1ஆசனம் மட்டும் தேசிய மக்கள் சக்திக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். தேர்தலில் தமிழத்; தேசிய மக்கள் கூட்டணி 27,986 வாக்குகளையும,; தமிழ் மக்கள் கூட்டணி 13,295 வாக்குகளையும், மருத்துவர் நந்தகுமார் முயற்சியினால் பசுமாடு சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு 1262 வாக்குகளையும் பெற்றிருந்தது.
வன்னி தேர்தல் மாவட்டத்திலும் இதே நிலைதான். அங்கு தமிழரசுக் கட்சிக்கு 29,711 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அதேவேளை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 21,102 வாக்குகள் அளிக்கப்பட்டது. இரண்டையும் கூட்டினால் 50,813 வாக்குகள் கிடைத்திருக்கும.; இது தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளை விட அதிகமானது. தேசிய மக்கள் சக்தி 39,894 வாக்குகளைப் பெற்றிருந்தது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் போனஸ் ஆசனம் கூட்டமைப்புக்கே கிடைத்திருக்கும்.

முதன்மை நிலையைப் பெற்றிருக்கலாம். கூட்டாக பிரச்சாரம் செய்தால் 3 ஆசனங்களைப் பெற்றிருக்க முடியும்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு சின்னத்தில்; போட்டியிட்டிருந்தால் தேசிய மக்கள் சக்தி அளிக்கப்பட்ட வாக்குகளும் வெகுவாகக் குறைந்திருக்கும். எனவே தேசிய மக்கள் சக்திக்கு ஆசனங்கள் அதிகம் சென்றமைக்கு காரணம் தமிழ்த் தேசியக் கட்சிகளே தவிர தமிழ் மக்கள் அல்ல. கட்சிகளினதும், தனிப்பட்டவர்களதும் நலன்களை முதன்மைப்படுத்தி ஒருங்கிணைந்த அரசியலை மேற்கொள்ளத் தவறியதால் ஏற்பட்ட விளைவு இது.
இந்த நிலைமைக்கு இருதரப்புகள் பொறுப்புக் கூற வேண்டும.; ஒன்று சுமந்திரன். இரண்டாவது கஜேந்திரகுமார். இதில் பிரதான குற்றவாளி சுமந்திரன் தான். இங்கு அவர் தனது தனிப்பட்ட அரசியல் நலங்களுக்காக முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதறடித்தார.; பின்னர் தமிழரசுக் கட்சியை சிதறடித்தார். இதன் மூலம் மொத்த தமிழ்த் தேசிய அரசியலும் பலவீனத்தை ஏற்படுத்தினார.; கட்சி மத்திய குழுவின் பெரும்பான்மையை தனக்கு சாதகமாகக் கொண்டு முழுக் கட்சியையும் பலவீனப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்தார.; தனக்கு சாதகமானவர்களைக் கொண்டே வேட்பாளர் பட்டியலை நிரப்பினார். யாழ்ப்பாணத்திற்கான வேட்பாளர் பட்டியலில் சிறீதரனைத் தவிர ஏனைய 8 பேரும் சுமந்திரன் சார்பானவர்களாகவே இருந்தனர.; பிரச்சார நடவடிக்கைகளிலும் இளங்கோவன், ஆர்னோல்ட் என்பவர்கள் மட்டுமே தனியாகப் பிரச்சாரம் செய்தனர். ஏனைய ஆறு பேரும் தங்களுக்கு வாக்குக் கேட்காமல் சுமந்திரனுக்கே வாக்குக் கேட்டனர

இந்த இடத்தில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட குழு சற்று புத்திசாலித்தனமாக நடந்து கொண்டது என்றே கூற வேண்டும.; அங்கும் சாணக்கியனுக்கு சார்பானவர்கள் சாணக்கியனுக்கு எதிரானவர்கள் என இரண்டு குழுக்கள் இருந்தன. அவர்கள் தங்களுடைய முரண்பாட்டை ஒருபுறம் தள்ளிவிட்டு ஐக்கியமாக தேர்தலில் போட்டியிட்டதனால் மாவட்டத்தில் முதன்மை நிலையை அடைந்தனர.; இந்தத் தடவை வடக்கு தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டை காட்டவில்லை. கிழக்கு ஒருமைப்பாட்டை காட்டியது. இதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியலின் மானத்தை குறைந்தளவிலாவது பாதுகாத்தது.
திருக்கோணமலையில் ஆயரின் தலையிட்டினால் தமிழரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து போட்டியிட்டன. இதன் மூலம் திருகோணமலைக்கான ஒரு ஆசனத்தை பாதுகாக்க முடிந்தது. அம்பாறை மாவட்டத்தில் இதற்கான முயற்சி எடுக்கப்பட்ட போதும் தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கவில்லை. இதனால் மிகச் சொற்ப வாக்குகளினாலேயே அம்பாறை மாவட்டத்திற்கான ஒரு ஆசனத்தை பாதுகாக்க முடிந்தது.
ஜனாதிபதி தேர்தலில் வடக்கு தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்தது. கிழக்கு மகன் ஒருவருக்கு வடக்கு 1,50,000 வரையிலான வாக்குகளை வழங்கியிருந்தது. அதன் பிரதிபலிப்பை பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கு காட்டியது. இதற்காக அனைத்து தமிழ்த்; தேசிய சக்திகளும் கிழக்கிற்கு நன்றி கூற கடமைப்பட்டவர்களாக உள்ளனர்.

இரண்டாவது கஜேந்திரகுமார். தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு மீதும் பின்னர் தமிழரசுக் கட்சி மீதும் அதிர்ப்த்தி தமிழ் மக்களிடம் நீண்ட காலமாகவே நிலவி வந்தது. தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்டும் பணியை கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய அரசியலை கைவிட்டு விட்டு இணக்க அரசியலை மேற்கொண்டமை என்பவற்றினாலேயே அந்த அதிர்ப்தி ஏற்பட்டிருந்தது. இந்த அதிர்ப்தி காரணமாக ஒரு மாற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் சிவில் சமூக மையம் தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்கள் உருவாகியிருந்தன. இவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனேயே அதிக நெருக்கத்தை கொண்டிருந்தன. இந்த ஆதரவுகளை கட்டியெழுப்பி தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் பணியை முன்னணி செய்திருக்க வேண்டும். இதற்கு மாறாக தமிழ் மக்கள் பேரவை சிதைந்து போவதற்கு முன்னணியும் ஒரு காரணமாகியது. தமிழ் மக்கள் பேரவை உயிர்ப்போடு செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது இலகுவாக இருந்திருக்கும.; பொதுவாகவே இச்செயற்ப்பாடுகளினால் ஒருங்கிணைந்த அரசியலுக்கு பொருத்தமற்ற கட்சி என்ற பெயரை முன்னணி ஈட்டிக் கொண்டது. ஒருங்கிணைந்த அரசியல் என வரும்போது நூறு வீதம் ஒரு கட்சியின் கருத்துகளே மேல் நிலையில் நிற்கும் எனக் கூற முடியாது. அங்கு விட்டுக் கொடுப்புகள் அவசியம். முன்னணியிடம் அது மருந்திற்கு கூட இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
இத்தனைக்கும் தமிழ் மக்கள் பேரவையில் முன்னணியின் கருத்துக்களே மேல் நிலையில் நின்றன. அது முன்வைத்த தீர்வு யோசனை யாப்பிலும் முன்னணியே பிரதான பாத்திரத்தை வகித்தது. இந்நிலையிலும் முன்னணி தமிழ் மக்கள் பேரவையை விட்டு வெளியேறியமை துரதிஸ்டமானது. தேசம் என வரும்போது அதில் நல்லவர்களும் இருப்பார்கள.

கெட்டவர்களும் இருப்பார்கள். அரைத்தேசியக்காறர், கால்தேசியகாறர், முக்கால் தேசியக் காறர்களும் இருப்பார்கள். தேசமாகத் திரட்டல் என்பது அவர்களையும் இணைத்தே மேற்கொள்ள வேண்டிய பணியாகும். தனி ஒரு கட்சியினால் மட்டும் மக்களை தேசமாகத் திரட்ட முடியாது. ஜே.வி.பி கூட ஒரு தனிக் கட்சியாக இருக்கும் போது சிங்கள மக்களை ஒரு தேசமாகத் திரட்ட முடியவில்லை.
அது பல படிகள் கீழே இறங்கி தேசிய மக்கள் சக்தியை உருவாக்கிய பின்னரே சிங்கள மக்களை ஒரு தேசமாக திரட்ட முடிந்தது. இதனை உருவாக்குவதற்காக கொள்கை நிலைப்பாட்டிலும் பல நெகிழ்ச்சியைக் காட்டியது. பல்வேறு சிவில் தரப்புகளையும் இணைத்து பரந்து பட்ட கூட்டணியை உருவாக்கியது. இத்தனைக்கும் ஜே.வி.பி ஆரம்பகாலம் தொட்டு ஒரு அரசியல் கட்சியாக மட்டும் அது இருக்கவில்லை. ஒரு அரசியல் இயக்கமாக இருந்தது. தேர்தல் அரசியலுக்கு அப்பால் பல்வேறு பணிகளை அது முன்னெடுத்து வந்தது. இந்த அரசியல் இயக்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிதான் தேசிய மக்கள் சக்தி.
இத்தனைக்கும் பிறகும் கூட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் நூற்றுக்கு மேற்பட்ட உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்களையும் முன்னணிக்கு மக்கள் வழங்கியிருந்தனர். இதனை முதலீடாக வைத்து முன்னணி முன்நோக்கிச் சென்றிருக்க வேண்டும். இதற்கு மாறாக விருப்பு வாக்கு நெருக்கடியால் வந்த கட்சியின் உட்பிரச்சினையைக் கூட அதனைத் தீர்க்க முடியவில்லை.

கட்சி இரண்டாக பிளவுபட்டது. இந்தப் பிளவினை தடுப்பதற்காக முயற்சி செய்த சிவில் தரப்பிற்கும் முன்னணி போதியளவு ஒத்துழைப்பை வழங்கவில்லை. கட்சி மேலும் சுருங்கியது. உள்ளூராட்சி சபை உறுப்பினர்களையும் தொடர்ச்சியாக தம்முடன் வைத்திருக்கவில்லை. முன்னணியில் நின்று செயல்பட்ட பலர் கட்சியிலிருந்து வெளியேறினர். முன்னணி கட்சி என்ற நிலைக்கு கூட வளரவில்லை. தொடர்ந்தும் ஒரு குழு நிலையிலேயே இருந்தது. கிராமிய கட்டமைப்புகள் எதுவும் அதனிடம் இருக்கவில்லை. மாணவர் அமைப்பு தொழிற்சங்க அமைப்புகளும் இருக்கவில்லை. அதனை இந்த நிலையிலாவது பாதுகாத்தது அதன் கொள்கை நிலைப்பாடும், அது மேற்கொண்ட அடையாளப் போராட்டங்களும் தான். வாக்குகளைத் திரட்ட அது மட்டும் உதவப் போவதில்லை. ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு எதிரான முன்னணியின் நிலைப்பாடும் அதன் ஆதரவை பாதித்தது.
முன்னணி இந்தத் தேர்தலில் தமக்கு 4 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தது. கஜேந்திரகுமார் அதனை பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார்.  வன்னியிலும்; ஒரு ஆசனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் முன்னணியின் உறுப்பினர்களிடம் இக்கட்டுரையாளர் “கள நிலவரம் உங்களுக்கு சாதகமாக இல்லை. ஒரு ஆசனத்தை பெறுவதற்கே கடுமையாகப் போராட வேண்டி வரும்” எனக் கூறியிருந்தார். தேர்தல் முடிவுகள் உண்மையை வெளிப்படுத்தின. கடந்த தேர்தலில் 54,000 வரையான வாக்குகளைப் பெற்றவர்கள் இந்தத் தேர்தலில் 27,986 வாக்குகளையே பெற்றிருந்தனர். ஆதரவுத் தளம் சரி அரைவாசியாகக் குறைந்திருந்தது. முன்னணி இதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். கொள்கை நிலைப்பட்ட கட்சி என்ற வகையில் பாடங்களை கற்றுக் கொண்டால் முன்னே செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலை மிகப் பரிதாபமான நிலையாகும். தமிழ்ப்; பொது வேட்பாளர் விவகாரம் அவர்களின் மதிப்பை சற்று உயர்த்தியிருந்த வேளை அதனை தொடர்ச்சியாக பேணியிருக்க வேண்டும். அவர்கள் அதனைப் பேணத்தவறி விட்டனர். சங்கு சின்னத்தை பயன்படுத்துவதன் மூலம் பொது வேட்பாளருக்குரிய வாக்குகளை மடை மாற்றலாம் என்ற கனவு வெறும் கனவாகவே போய்விட்டது. பொது வேட்பாளர் விவகாரத்திலும் அதில் செயல்பட்ட கட்சிகள் அனைத்தும் விசுவாசமாக செயல்பட்டன என கூற முடியாது. ஆரம்ப காலங்களில் செல்வம் அடைக்கலநாதனும், சித்தார்த்தனும் தமிழ்ப்; பொது வேட்பாளருக்கும,; சிங்கள வேட்பாளருக்கும் இடையே ஒழித்து விளையாடினர். பிரச்சாரங்களை விசுவாசத்துடன் செய்தார்கள் என கூற முடியாது. கடைசி நேரத்தில் சில ஒத்துழைப்புக்களை வழங்கினர் என்பது உண்மையே! கட்சியின் அடுத்த மட்ட அணியினர் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். ஏனைய கட்சிகளின் பங்களிப்பு வலுவாகவே இருந்தது. தமிழரசுக் கட்சியின் ஒரு பிரிவினரின் பங்கும் குறைத்து மதிப்பிடக் கூடிய ஒன்றல்ல.
தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரத்தில் ஒத்துழைத்த கட்சிகளையும் இணைத்து ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் யாழ்பாணத்தில் ஒரு ஆசனத்தையாவது பெற்றிருக்க முடியும். தமிழரசுக் கட்சியின் அதிர்ப்திப் பிரிவினரும் ஒத்துழைப்பை வழங்கியிருப்பர். பொது வேட்பாளர் விவகாரத்தில் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கமும் வலுவான பங்களிப்பினை வழங்கியிருந்தன.
தேர்தலுக்கு சங்கு சின்னத்தை பயன்படுத்த முனைந்தமை. மோசமான அறநெறித் தவறு. அதனைப் பயன்படுத்தாமல் குத்துவிளக்கு சின்னத்தை பயன்படுத்தியிருந்தால் வாக்குகளை அதிகமாகப் பெற்றிருக்க முடியும். சங்குச் சின்னத்தை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பையும் பாதுகாத்திருக்கலாம்.

தமிழ் மக்கள் பொதுச்சபை பாராளுமன்றத் தேர்தல் உள் போட்டி நிறைந்த தேர்தலாக இருந்தமையினால் அதன் பிரதான இலக்கான மக்களை தேசமாக திரட்டுதல் என்பதற்கு இடையூறு இருக்கும். எனக் கருதி தேர்தல் செயற்பாட்டிலிருந்து விலகியிருந்தது. எதிர்கால நலன் கருதி சங்கு சின்னத்தை பயன்படுத்துவதை தவிருங்கள் எனவும் வேண்டி யிருந்தது. ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவில்லை. விளைவு யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனத்தைக் கூட அதனால் பெற முடியவில்லை. வன்னியில் அதிர்ஸ்டவசமாக ஒரு ஆசனம் கிடைத்தது. இக்கட்சியும் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.

வடக்கில் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களைப் பெற்றமை. தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒரு பின்னடைவு என்பது உண்மைதான். ஆனால் அது நிரந்தரமானது அல்ல. தற்காலிக பின்னடைவே. மறைந்த அரசியல் செயற்பாட்டாளர் மாணிக்க சோதி (மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்ன சிங்கத்தின் சகோதரர்) ஒரு தடவை இக்கட்டுரையாளரிடம் கூறினர் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனமடைவது தவிர்க்க முடியாதது. இது பலவீனமடையும் போது தென்னிலங்கைக் கட்சிகள் தற்காலிகமாக அவ்வெற்றிடத்தை நிரப்பும் அது தற்காலிகமானது தான். அதன் பின்னர் வலுவான ஒருங்கிணைந்த அரசியல் இயக்கத்தை உருவாக்கக் கூடியதாக இருக்கும்” அவர் கூறிய நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் அரசியல் தீர்வு என்ற அடிப்படைப் பிரச்சினை, இன அழிப்புக்கு பொறுப்புக்கூறும் பிரச்சினை, ஆக்கிரமிப்புப் பிரச்சினை, இயல்பு நிலைக்குக் கொண்டு வருதல் பிரச்சினை, அன்றாடப் பிரச்சினை என ஐந்து வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இவை எவற்றிற்கும் அநுரா அரசாங்கம் தீர்வு காணப் போவதில்லை.

இவற்றிற்கு தீர்வு காண வேண்டுமாயின் சிறீலங்கா அரசுருவாக்கத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.  அந்த மாற்றம் என்பது இலங்கையின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொண்டு அரச அதிகாரக் கட்டமைப்பில் அவற்றை இணைப்பது தான். இந்த மாற்றம் ஏற்படப் போவதில்லை. அரசின் நோக்கங்களை நிறைவேற்றுவதே அரசாங்கம் என்ற வகையில் அநுரா அரசாங்கமும் சிங்கள பௌத்த நலன்களை பாதுகாப்பதாகவே இருக்கும். இந்தத் தொடர்நிலைமை தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரள்வதற்கு வழி சமைக்கும். அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சைக் கூட வடக்கிக்கோ, கிழக்கிக்கோ வழங்கவில்லை என்பது இங்கு கவனிப்புக்குரியதாகும்.
வன்னியில் சிங்கள அரசியலைப் பலப்படுத்துவதற்காக தோல்வியடைந்த சிங்கள வேட்பாளர் ஒருவரை தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் மூலம் நியமித்துள்ளது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
எனவே தற்போதைய நிலைமை தற்காலிக பின்னடைவு தான். ஆனாலும் துவண்டு போகக் கூடிய பின்னடைவல்ல.

Recommended For You

About the Author: Editor Elukainews