வடக்கில் மூன்று ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை, எச்சரிக்கும் நாமல் எம்.பி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், உள்ளூர் காணி அதிகாரிகளால் உரிமையாளர்கள் உறுதி செய்யப்பட்ட, மூன்று தசாப்தங்களாக இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வடக்கின் தனியார் காணியொன்றை விடுவிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் காணியில் ஸ்தாபிக்கப்பட்ட பருத்தித்துறை, கற்கோவளம் இராணுவ முகாமை அகற்றும் நடவடிக்கை நவம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளதோடு, இரண்டு வாரங்களுக்குள் காணி உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக எச்சரித்துள்ள நாடாளுமன்றத்தில் உள்ள ஒரே ராஜபக்ச குடும்ப உறுப்பினராக நாமல் ராஜபக்ச, எதிர்காலத்தில் ‘பெரிய எண்ணிக்கையிலான’  இராணுவ முகாம்கள் விடுவிக்கப்படும் என கூறுகிறார்.

1995ஆம் ஆண்டு இராணுவம் பலவந்தமாக காணிகளை சுவீகரித்த பின்னர் இலங்கை சிங்கப் படைப்பிரிவின் 4ஆவது படையணிக்கு சொந்தமான இராணுவ முகாம் ஸ்தாபிக்கப்பட்டது.

உரிமையாளர்கள் தமது காணிகளை மீள வழங்குமாறு கோரி தொடர்ந்த போராட்டத்தை கருத்திற்கொண்டு அவர்கள் காணியின் உத்தியோகபூர்வ உரிமையாளர்களா என்பதை பரிசோதிக்குமாறு இராணுவ முகாமின் அதிகாரிகள் 2022ஆம் ஆண்டு பருத்தித்துறை பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும், காணியின் உரிமையாளர்கள் மூவர் என, பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியிருந்ததாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, 2023 ஓகஸ்ட் 14ஆம் திகதி இராணுவ முகாமை அகற்றுவதற்கு இராணுவம் தயாரான போது, பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இராணுவ முகாம் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என பிரதேசவாசிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இராணுவத் தலைமையகத்திலிருந்து கிடைத்த உத்தரவிற்கு அமைய, இராணுவ முகாமை அகற்றும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்த, இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகமும் இராணுவப் பேச்சாளருமான மேஜர் ஜெனரல் ரசிக குமார, இராணுவ முகாம் முழுமையாக அகற்றப்பட்டதன் பின்னர் காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

“இராணுவ தளத்தில் மின்கம்பங்களை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இராணுவத்தினருக்கு ஏற்கனவே கிடைத்த கோரிக்கைகளின் பிரகாரம் இந்த காணிகளை விடுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இராணுவ முகாம் முற்றாக அகற்றப்பட்ட பின்னர் காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.”

அதேபோன்று, எதிர்வரும் மாதங்களில் பெருமளவிலான இராணுவ முகாம்களை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறும் நாமல் ராஜபக்ச எம்.பி, பாதுகாப்பு தரப்பினரின் கலந்துரையாடல் மற்றும் மீளாய்வுக்கு பின்னர் காணி விடுவிப்பினை மேற்கொண்டால் பிரச்சினைகள் இல்லை என கூறுகிறார்.

“இராணுவ முகாம்களை அகற்றுவது மற்றும் காணிகளை விடுவிப்பது என்பது பாதுகாப்புப் படையினருடன் கலந்துரையாடல் மற்றும் மீளாய்வுக்குப் பின்னரே பொறுப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும். தேசிய பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது கட்சியின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஆட்சியமைத்திருந்த சந்தர்ப்பத்தில், பருத்தித்துறை கற்கோவளம் இராணுவ முகாம் அமைந்திருந்த காணியை மீளக் கையளிப்பதற்காக, இராணுவமும் உள்ளூராட்சி அதிகாரிகளும் காணியின் உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தபோது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது நாமல் ராஜபக்சவோ இது தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை.

நவம்பர் 10 ஆம் திகதி வவுனியாவில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, வடக்கில் சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்குவது குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews