நீதி பொறிமுறையற்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை (OMP) வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரிப்பதாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் (டிசம்பர் 4) இடம்பெற்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்க தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைநகரில் ஊடகவியலாளர்களிடம் இந்த விடயத்தை தெரிவித்தார்.
“காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் திருப்தியா என கேட்டிருந்தார், நீதிமன்ற பொறிமுறை ஒன்று இல்லாவிட்டால் அது எங்களுக்கு தேவைப்படாது, ஏனென்றால் அதனை எங்களது மக்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என சொல்லியிருந்தோம்.”
2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை நிறுவுதல், நிர்வகித்தல் மற்றும் செயற்படுத்தல் ஆகிய விதிகளுக்கு அமைவாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நாடாமன்ற தொடர்பாடல் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், வடக்கு கிழக்கு மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த காலத்தை விட மேலதிகமாகவே அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கலந்துரையாடலின் போது தெரிவித்ததாக இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“புதிதாக அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கும் விடயம் ஒன்றை நான் முன்மொழிந்திருந்தேன். அவ்வாறு பிணை வழங்குவதாயின் அவர்கள் பொலிஸ் நிலையமொன்றில் வாரத்திற்கு ஒருமுறை கையெழுத்து இடக்கூடிய வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமா என பார்க்கலாம் எனச் சொன்னார். இவர்கள் செய்த குற்றத்தையும் தாண்டி நீண்டகாலம் சிறையில் இருந்துள்ளதை ஜனாதிபதியும் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் விடுதலை செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டுடன் இணங்குவதாக ஜனாதிபதியும் குறிப்பிட்டார்.”
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, அதிகாரங்களுடன் கூடிய முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படாத காரணத்தினால், அப்பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் சுமார் நாற்பது ஆண்டுகளாக பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தமிழரசு கட்சியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பிலும் பேசப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக, தான் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்ங, அமைச்சின் செயலாளருடன் பேசுவதாக அவர் சொல்லியிருந்தார். அதேபோல் காணி விடயங்கள் தொடர்பாக உரிய திணைக்களங்களுடன் பேசுவதாக அவர் சொல்லியிருந்தார். அதேபோல் வரவு செலவுத் திட்டத்திலே நாங்கள் முன்மொழிந்த சில அபிவிருத்தி திட்டங்களை உள்ளடக்குவதாக சொல்லியிருந்தார்.”
சமஷ்டி அரசியல் தீர்வு
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு மற்றும் வடக்கு கிழக்கு மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
“வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலன ஒரு அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றோம். இது எங்களது கட்சியின் நிலைப்பாடாக சொல்லியிருந்தோம். அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பேசினோம். பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவது பற்றிய எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தோம். அத்துடன் காணி அபகரிப்பு தொடர்பாக, மகாவலி, பொரஸ்ட், தொல்பொருள், வனஇலாகா, கரையோர பாதுகாப்பு பிரிவு, இராணுவ முகாம்கள் அகற்றுவது தொடர்பாகவும் பேசியிருந்தோம், அந்த திணைக்களங்கள் ஊடாக இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பில் பேசியிருந்தோம். அதேபோல் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவது குறித்தும் பேசியிருந்தோம். நாங்கள் எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி குறித்தும் பேசியிருந்தோம்.”
அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள நிலைப்பாட்டை புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் போது ஆராய முடியும் என ஜனாதிபதி தெரிவித்ததாக சாணக்கியன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், சாணக்கியன் இராசமாணிக்கம், ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி ஸ்ரீநாத், துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.