தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப் பிரச்சனையை தற்போது இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்துக்கொண்டு சீனா குறுகிய நோக்கத்தில் பார்க்கக் கூடாது என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
அண்மையில் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர் தமிழ் தெற்குடன் இணைந்து தேசிய சக்தியுடன் அணி திரண்டு விட்டனர் என்ற கருத்தை ஊடகங்களுக்கு கூறியிருந்தார் .
அவருடைய கருத்து தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப் பிரச்சனையை குறுகிய நோக்கத்தில் பார்க்கும் செயலாகவே பார்க்க முடிகிறது.
தமிழ் மக்கள் தமது உரிமையை வென்றெடுப்பதற்காக அகிம்சை நீதியாகவும் பின்னர் ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவும் கோரி நின்ற நிலையில் 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஜனநாயக ரீதியில் தமது உரிமைக்காக போராடி வருகின்றனர்.
இத்தகைய போராட்டத்தை சீன நாடு நன்கு அறிந்து உள்ள நிலையில் அதன் இலங்கைக்கான தூதுவர் தமிழ் மக்களின் நீண்ட கால தேசிய இன பிரச்சனையை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டு பேசுவது இன்னொரு நாட்டினுடைய தூதுவருக்கு ஏற்ற செயல் அல்ல.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு 29 வீதமான மக்களே வாக்களித்துள்ளார்கள்.
சுமார் 60 வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு வாக்குகளை வழங்கியுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது அரசியல் தீர்வை எதிர்பார்த்து தமிழ் கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள்.
இதனை அறியாத சீனத் தூதர் யாழ் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்ததை காரணமாக வைத்து தமிழ் மக்கள் தெற்குடன் கைகோர்த்து விட்டனர் என கூறுவது ஏற்புடைய செயல் அல்ல.
இலங்கை தீவில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு வழிகளில் அடிமைகளாக நடாத்தப்படுகின்ற நிலையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற ஒரு நாட்டுக்குள் பிரிக்க முடியாத வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வை கோரி நிக்கின்றனர்.
ஆகவே சீனா தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க விரும்பாவிட்டாலும் தமிழ் மக்கள் உணர்வுகளை காயப்படுத்தாமல் இருப்பது நல்லது என அவர் மேலும் தெரிவித்தார்.