ஆளணி இன்மையால் வட்டு வைத்தியசாலை வளங்கள் வீணாகிறது – பவா எம்.பி தெரிவிப்பு!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் தேவையான கட்டட வசதிகள் உள்ளிட்ட வளங்கள் காணப்படுகின்றன. இருந்தும் பணி நியமனங்கள் வழங்கப்படாததால் அந்த வளங்கள் வீணடிக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்தியருமான சிறி பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறும், அந்த வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிலையில் அவர்களது வேண்டுகோளை ஏற்று நேற்றையதினம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் மற்றும் சமூகமட்ட அமைப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு, வைத்தியசாலை வளாகத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த வைத்தியசாலை ஒரு வரப்பிரசாதமாக காணப்படுகிறது. இந்த வைத்தியசாலை கண்டிப்பாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய ஒன்று. சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு வழிவகுப்பேன்.
இந்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தால், மக்கள் தொலைவில் உள்ள வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய தேவைகள் இல்லை. இந்த வைத்தியசாலையிலேயே சேவைகளை பெற முடியும். அத்துடன் வேறு வைத்தியசாலைகளின் வேலைச்சுமையையும் குறைக்க முடியும். வைத்தியசாலையின் ஆளணி பற்றாகுறை நிவர்த்தி செய்யப்படும் பட்சத்தில் பெரும்பாலான மக்கள் இந்த வைத்தியசாலையின் மூலம் பயன்பெறுவர்.
அத்துடன் இந்த வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வருடாந்த இடமாற்றத்தில் உள்ளார். எனவே இது குறித்து ஏற்கனவே பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரியுடன் கதைத்துள்ளேன். இருப்பினும் மீண்டும் அவருடன் கதைத்து இதற்கு ஒரு தீர்வு வழங்குவேன் – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews