பெண்களை தவறான செயலுக்கு அழைத்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைப்பு!

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் தவறான உறவுக்கு அழைத்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றையதினம் மாவிட்டபுரம் பகுதியில் உள்ள தையலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் தையலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவரை தவறான உறவுக்கு அழைத்துள்ளார். அத்துடன் கடைக்கு வந்த இரு யுவதிகளிடமும் முறையற்ற விதத்தில் செயற்பட்டுள்ளார்.
இதன்போது, ஆத்திரமடைந்த குறித்த பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்தார். இந்நிலையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் அருகில் வைத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கபட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்தநிலையில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த பெண்ணை விசாரிக்க முற்பட்ட போது அப்பெண் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதேவேளை பெண்ணின் உறவினர் தன்னிடம் காணொளியும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உடனே குறித்த காவல்துறை உத்தியோகத்தர் குறித்த பெண்ணின் கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதலும் நடாத்தியுள்ளார்.
உடனடியாக பொலிஸார் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தடுத்து நிறுத்தினர். அதன்பின்னர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சமரசம் பேசியுள்ளதுடன் முறைப்பாடு பதிவு செய்யவும் தயக்கம் வெளியிட்டார்.
இதையடுத்து, குறித்த விடயம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அவர்களது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பொறுப்பதிகாரியை தொடர்புகொண்ட த.கனகராஜ், முறைப்பாட்டினை முதலில் பதிவு செய்யுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தினார். அதன்பின்னர் முறைப்பாட்டினை பதிவு செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews