யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில், வாராந்தம் இடம் பெறும் நிகழ்வாக ஆன்மீக அருளுரையும், உதவி திட்டம் வழங்கும் நிகழ்வும் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நேற்று 07/02/2025 சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது.
இதில் ஆன்மீக அருளுரையினை,
“சைவத் தமிழர் கலாசாரம்“ என்ற ஆன்மீகத் தலைப்பில் மதுரகவி காரை எம்.பி.அருளானந்தன் ஆசிரியர் அவர்கள் நிகழ்த்தினார்.
உதவிகளாக பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு மருத்துவச் செலவாக ரூபா 30,000 நிதியும், வழங்கப்பட்டதோடு,
மாதாந்தம் 10,000 ரூபா வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடந்த 04/02/2025 அன்று புத்தளம் சேனைக்குடியிருப்பு, மணல்
குன்று, அபயபுர, அரலியபுயன, பிரதேசங்களில் வாழும் பல்லின சமூகங்களை சேர்ந்த,
80 குடும்பங்களுக்கு ரூபா 280,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இவ் உதவிகள் வழங்கும் நிகழ்வு சமூகசேவையாளரும், கருமாரிஅம்மன் ஆலய ஸ்தாபகருமான எஸ். மகேந்திரன் தலைமையில்,
சேனைக்குடியிருப்பு பத்தினியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றன.
இதில் ஆலய பிரதமகுரு, மருத்துவர் க.மு.திருச்செல்வம், ஓய்வுநிலை அதிபர் மா.நாகராஜா, ஆலய தலைவர் ரமணீதரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்கள்