
தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தினால் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (13.02.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.





இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் தலைவர் விஜித் ரொஹான் பொ்னான்டோ கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் தொழில் முயற்சியாளர்கள் இடர்பாடுகளை கலந்துரையாடி தீர்க்கவும், ஆக்க பூர்வமான கருத்துக்களை பகிர்வதுமே இக் கூட்டத்தின் நோக்கம் எனவும், முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து ஒழுங்குபடுத்துவதே அரச பணியாளர்களின் நோக்கமாகவிருக்க வேண்டும் எனவும், ஒர் கூரையின் கீழ் தீர்க்கவல்ல வகையில் அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டு, அதற்கான கருத்துக்களையும் முன்வைக்குமாறும் கேட்டுக் கொண்டனததுடன், இக் கலந்துரையாடலில் பங்குபற்றிய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தின் தலைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் அதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு, முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தீர்க்கும் வகையில் தொடர்புடைய திணைக்களங்களையும் அழைத்து சீரான கால இடைவெளிகளில் கலந்துரையாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள், “க்ளீன் ஶ்ரீலங்கா” செயற்றிட்டமானது தனித்தே சூழலை மாத்திரம் சுத்தப்படுத்துவது மட்டுமல்ல எனவும், மனங்களிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், முதலீட்டாளர்களுக்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் எவ்வாறு என்ன அடிப்படையில் உதவிகள் வழங்கலாம் என்று முயற்சி செய்து முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இக் கலந்துரையாடலில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சன்துனி ஆரியவன்ச, உதவிப்பணிப்பாளர் திரு.சுசந்த குமார, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன், வர்த்தக முகாமைத்துவ குழுவின் தலைவர், வர்த்தக கைத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முதலீட்டாளர்கள் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.