
பிரதானமாக தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிற்பாடு வடக்கு கிழக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து பயணிப்பது அதிக ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கு அமைவாக தேசிய மக்கள் சத்தியம் தனது திட்டங்களையும் உரையாடல்களையும் உத்தியோக பற்றற்ற முறையில் வடக்கு கிழக்கு நோக்கி அதிகப்படுத்தி வருகிறது. வரவு செலவுத் திட்டத்திலும் வடக்கு கிழக்கு நோக்கி பாரிய அபிவிருத்திக்கான நிதி உள்ளது. கடந்த 30 ஆண்டுகால போரின் விளைவுகள் மீளமைக்கப்படுகின்ற முயற்சியாகவே நிதி ஒதுக்கங்களும் அபிவிருத்தி திட்டங்களும் முன்வைக்கப்படுகிறதாக வியாக்கியானங்கள் செய்யப்படுன்கிறன. 2009க்கு பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் அவகை செய்முறை எதனையும் அதீதமாக முதன்மைப்படுத்த முன்வரவில்லை. இது புதிய அரசாங்கம் வடக்கு கிழக்கில் காலூன்றுவதற்கு வாய்ப்பானதாக அமைந்தது. அதன் அடிப்படையிலேயே பரந்தன் கைத்தொழில் பேட்டை, காங்கேசன்துறையில் இருந்து மாங்குளம் வரையான பகுதிகளில் ஐந்துக்கு மேற்பட்ட கைத்தொழில் பூங்காக்களை அமைப்பது, வடமாகாணத்தில் தெங்கு முக்கோணவலயம் அமைப்பது, வடக்கு கிழக்கில் கிராமிய வீதி போக்குவரத்து மற்றும் பாலம் அமைப்பதுவட்டுவாகல் பாலம் அமைப்பது, தென் இலங்கைச் சக்திகளால் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாணப் பொது நூலகத்தை மீளவும் புணரமைப்புச் செய்ய நிதி ஒதுக்கீடு என வடக்கு கிழக்கு பாரிய அபிவிருத்தி முயற்சிகளுக்கான நிதி புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை தேடுவது அவசியமானது.
முதலாவது தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் அதிகமான நிதி ஒதுக்கீடுகளை செய்யப்பட்டமையானது மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கான ஆதரவை அதிகரித்துள்ளது என்றே தெரிகிறது. சாதாரண மக்கள் மட்டுமின்றி எல்லா தரப்பிலும் உள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதாக கருதுகின்றனர். இது ஒரு ஆரோக்கியமான அரசகட்டுமானத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை வடக்கு கிழக்கு மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு பொருளாதார நெருக்கடி வறுமை போரின் அழிவுகள் போன்றவற்றால் பாதிப்படைந்த பிரதேசம் என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியின் நடவடிக்கை முதன்மையானதாக புரிந்து கொள்ளப்படுகிறது. இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கங்களின் இயல்புகளை மேலோட்டமாக மதிப்பீடு செய்ய முயல்கின்ற போது தென்படும். கடந்த கால அரசாங்கங்களோடு ஒப்பிடுகின்ற விதத்தில் தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அரவணைத்துச் செல்வதாக மக்களிடம் அபிப்பிராயம் காணப்படுகிறது. இது அடுத்து வரும் உள்ளூராட்சி தேர்தலில் அதிக பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. வடக்குக் கிழக்கில் அதிகமான உள்ளூராட்சிகளை கைப்பற்றாது விட்டாலும் கணிசமான சபைகளின் உறுப்புரிமையை தனதாக்க முயலும். முன்னய அரசாங்கம் கடந்த காலங்களில் இவ்வாறு நிதி ஒதுக்கீடுகளை செய்வதும் பின்னர் அவற்றை அமுல்படுத்த விடாமல் தடுப்பதும் அதன் மீதான குற்றச்சாட்டை வடக்கு கிழக்கு நிர்வாக அதிகாரிகளிடமும் அதன் அதிகாரக் கட்டமைப்புக்கள் மீதும் அரசியல் தலைமைகள் மீதும் போடுவதும் இயல்பானதே. தேசிய மக்கள் சக்தி அதிலிருந்து வேறுபடுமா என்பதையும் ஒதுக்கீடுகள் சரியான முறையில் பிரயோகப்படுத்தப்படும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. வடக்கு கிழக்கு முதலீட்டாளர்கள் இதோ முதலீட்டு திட்டங்களில் எடுக்கப் போகும் கவனமும் தென்னிலங்கை முதலீட்டாளர்களுக்கு அதற்கான வாய்ப்புகளும் எவ்வாறு புதிய அரசாங்கம் கையாளும் என்பதை பொறுத்தே இதன் இருப்பு சாத்தியமாகும்.
இரண்டாவது தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டத்தின் மத்திய தர வர்க்கத்துக்கான வாய்ப்புகளும் சலுகைகளும் அதிகரித்துள்ளது என்றே தெரியகிறது. குறிப்பாக அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நலச்சேவைகள் மீதான கரிசனை அதற்கான நிதி ஒதுக்கீடுகள் போன்றவை அதிக கவனத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தி யிருக்கிறது.; 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் பொருட்களின் விலையேற்றத்திற்கு நிகராக சம்பள உயர்வு நிகழ்ந்து இருக்கிறதா என்று மதிப்பீட்டைக் கூட அரச உத்தியோகத்தர்கள் செய்ய தவறுகின்றனர். மாறாக இந்த அரசாங்கம் குறைந்த அளவிலான சம்பள உயர்வுத் திட்டத்தை அதீதமானது என்று கருதுகின்ற அவலநிலை அரச உத்தியோகத்தரிடம் ஏற்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு சேவை துறையை மட்டும் முதன்மைப்படுத்தி இருக்கும் அரசு ஊழியர்கள் பெருமளவுக்கு திருப்தி அடைந்திருப்பதாகவே தெரிகின்றது.
மூன்றாவது வட கிழக்கு மட்டுமின்றி உலகம் தழுவிய விதத்தில் பணிக்குழுவினர் அரச கொள்கை கோட்பாடுகளையும் தத்துவங்களையும் அமுலாக்குகின்ற பிரிவினராக உள்ளனர். அனேகமாக இலங்கை தீவில் அரசியல் தலையீட்டுடன் கூடிய அரச ஊழியர்களும் உயர் அதிகாரிகளிடம் குவிந்திருக்கும் சூழலில் அரச கொள்கை தத்துவங்களை அமுல்படுத்துவதின் பங்காளர்கள் அவர்களாகவே உள்ளனர். மக்களை நாளாந்தம் சந்திப்பவர்கள் மக்களோடு அரசின் திட்டங்களை கைமாற்றுபவர்கள் அரசாங்கத்தின் போக்கினை நிர்ணயிப்பவர்கள் என்ற அடிப்படையில் பணிக்குழுவினர் அதிக முக்கியமானவர்கள். பணிக்குழுகளினுடைய இருப்பு என்பது ஆட்சியில் இருக்க அரசாங்கத்தில் இருப்பாகவே உள்ளது. அது ஒர் அரசாங்கத்தை நிலை நிறுத்துவதும் தோற்கடிப்பதும் பணிக்குழுவைச் சாந்தது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பிரதான பங்காளர்களாக வடகிழக்கில் பணியாற்றிய பணிக்குழுவினரே காணப்பட்டனர். அவர்களுடைய எதிர்ப்புவாதமே ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டமாக மாறியது. அத்தகைய போராட்டத்தின் போக்கை திசைதிருப்புவதிலும் தோற்கடிப்பதிலும் அவர்களுக்கு பங்கு இருந்தது. ஈழவிடுதலைப் போராட்டத்தின் தோல்விகளுக்கு பின்னால் அவர்களின் பங்கும் காணப்பட்டது என்பது தவிர்க்க முடியாத விமர்சனமாகும். வடக்குக் கிழக்கிலுள்ள அதிகார வர்க்கம் தன்னுடைய நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கரிசனை கொண்டிருந்த சூழலிலே அத்தகைய போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் ஈழத் தமிழர்களாலேயே தோற்கடிக்கப்பட்டது என்ற விமர்சனத்தை நிராகரித்துவிட முடியாது. தென் இலங்கைக்கும் பிராந்திய அரசுகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் இருந்த அதேயளவான பங்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் செயல்பட்ட பெரும்பான்மையான மத்திய தர வர்க்கத்தினருக்கு உரியதாகும். அவ்வாறே தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளையும் திட்டங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்பவர்களாக பணிக்குழுவினரும் மத்திய தர வர்க்கத்தினரும் காணப்படுகிறனர்.
நான்காவது ஈழத் தமிழர்களின் மிதவாத அரசியல் போராட்டத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் அதிகம் வளம்படுத்திய வடக்கு கிழக்கில் இயங்குகின்ற பல்கலைக்கழகங்களும் அவற்றின் புலமையாளர்களும் தேசிய மக்கள் சக்தி வரவு செலவு திட்டத்தை வெளிப்படையாக இல்லாவிட்டாலும் ஆதரிப்பவர்களாகவே காணப்படுகின்றனர். அவர்களது புலமை மக்களை சார்ந்து முடிவுகளை உரையாடுவதை விடுத்து அரசாங்கத்திற்கு ஆதரவான உரையாடல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். புதிய வரவு செலவுத் திட்டத்தின் உள்நோக்கங்களையும் அதன் நுணுக்கமான தந்திரோபாயங்களையும் உரையாடுவதை விடுத்து சாதரண மக்கள் போன்று மோம்போக்காக விவாதிக்கின்றனர். வெளிப்படையாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பங்குதாரர்களாக புலமையாளர்கள் காணப்படுவதோடு வடக்கு கிழக்கு எங்கும் இயங்கி வரும் கல்வி நிறுவனங்கள் புலமைத்துவ அமைப்புகள் சமூக செயல்பாட்டாளர்கள் என எல்லோருமே இதன் மீதான விமர்சனத்தை நுணுக்கமாக அன்றி மேலோட்டமாக முன்வைக்கின்றனர். இதன் பிரதிபலிப்புகள் எத்தகைய விளைவை தரும் என்பதில் கவனம் கொள்ள தவறுகின்றனர். குறிப்பாக வடக்கு கிழக்கு தனித்துவமான் தேசிய அடையாளத்தோடு காணப்படுகிறது. அதன் அடையாளத்தை உடைப்பது என்பது தென்னிலங்கைக்கு இருக்கும் பிரதான நிகழ்ச்சி நிரலாகும். இதில் தேசிய மக்கள் சக்தி ஐக்கிய தேசிய கட்சி பொதுஜனப் பெரமுன என்பனவற்றுக்கிடையில்; அடிப்படையில் வேறுபாடு கிடையாது. அனைத்து தரப்புகளும் வடக்கு கிழக்கு பிரச்சனை என்பது பொருளாதாரமானது என்பதையும் அதற்கான தீர்வை முன்வைப்பதிலேயே கவனத்தில் கொள்கிறார்களே அன்றி இதனை தேசிய இனப் பிரச்சினையாக கருதக் கூடாதெனக் எண்ணுகின்றனர். அதற்குள்ளே வரவு செலவுத் திட்டம் தனித்துவமான பங்கை ஆற்றியுள்ளது தமிழ் மக்களை தேசிய மக்கள் சக்தியின் பால் ஈர்ப்பதன் மூலம் வட கிழக்கு தனித்துவமானதாகவும் தேசிய அடையாளத்தை கொண்டதாகவும் இல்லாமல் செய்வது என்பது சுலபமானது என கருதுகின்றனர். தென்னிலங்கையில் இத்தகைய அணுகுமுறை க்கு வடக்கு கிழக்கு இயங்கும் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் பிரதான பங்காளிகளாக காணப்படுகின்றனர். அவர்களது கடந்த கால போலித்தனமும் போலித் தேசிய அடையாளங்களும் மக்கள் சாராத அரசியலும் இத்தகைய இழிநிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இதனை தெனிலங்கை சக்திகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு மக்களுடைய ஆதரவுனுடாக வடக்கு கிழக்கை தனித்துவம் அற்ற அடையாளத்துக்குள் நகர்த்துவதில் வெற்றி கண்டு வருகின்றது. உள்ளூராட்சி தேர்தல் அதற்கான இன்னுமோர் வாய்ப்பாக மாற இருக்கின்றது. தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது என்பது தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பது என்பது அந்த மக்களுடைய விருப்புக்கு உட்பட்டது. அந்த மக்கள் தங்களுடைய இருப்பையும் அடையாளத்தையும் நிராகரித்து விட்டு இலங்கை தேசிய அடையாளத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவது என்பது அவர்கள் சார்ந்தது. ஆனால் ஒரு தேசிய இனம் தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விட்டு குறிப்பாக மொழி பிரதேசம் அல்லது பாரம்பரியமான வாழ்விடம் அது சார்ந்திருக்க கூடிய பண்பாடு அதற்கே உரித்தான பொருளாதார கட்டமைப்புகள் அனைத்தையும் தொலைத்து விட்டு செயல்படுவது என்பது அந்த இனத்தின் அடிப்படைகளை அந்த இனமே அழிப்பதாக கொள்ளப்படும். அத்தகைய அழிவதனூடாக பொருளாதார அபிவிருத்தி அடைந்து கொள்வதே இலக்காக இருக்குமே அன்றி அடையாளங்களை பேணுவதாக அமைந்து விடாது. அவகையான பொருளாதார அபிவிருத்தி தான் அவசியமானது என்றால் அதனைப் பாதுகாப்பதற்கான அரசியல் அதிகாரமும் அவசியமானது. அல்லது இன்றைய பொருளாதார அபிவிருத்தி அடுத்துவரும் ஆட்சியில் காணாமல் போய்விடும். வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடம் என்பதை ஏற்றுக் கொள்ளாத எத்தகைய பொருளாதார அபிவிருத்தியும் நிலையான பொருளாதார அபிவிருத்தியாக அமையாது.
எனவே, தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு திட்டம் வடக்கு கிழக்கு நோக்கி அதன் அடிப்படைத் தேவைகள நோக்கி அதிக முன்மொழிவுகளை தந்துள்ளது. முன்மொழிவுகள் வடகிழக்கு தனித்துவமானது என்பதை அங்கீகரித்துக் கொள்வதிலும் அவற்றின் பயன்களை வடக்கு கிழக்கு மக்கள் அனுபவிப்பதற்கான அரசியல் வலுவையும் கொண்டிருக்குமாயின் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் நிலையான அபிவிருத்தியை சாத்தியப்படுத்தும். அதனை கடந்து தென்னிலங்கையிலும் பிராந்திய சர்வதேச சக்திகளிடமும் தங்கியிருக்கும் நிலை பாரிய அழிவையே ஏற்படுத்தும். அரசியல் அதிகாரம் அற்ற சூழலில் ஏற்படுகிற எத்தகைய மாற்றத்தையும் தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியலை காணாமல் ஆக்குகின்ற வலிமை பொருந்தியதாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-