மோடி-ட்ரம்ப் சந்திப்பு ஏகாதிபத்தியத்தினதும் அடிமைத்தனத்தினதும் குறியீடே? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்த சூழலில் இருந்து ஊடகவியலாளர்களை எதிர்கொள்ளும் வரையான உடல் மொழிகளில் ஏகாதிபத்தியத்துக்கும் அடிமைத்தனத்துக்குமான உறவு தன்மையையும் அவதானிக்க முடிகிறது. நரேந்திர மோடியின் அணுகுமுறைகளை பலவீனமான ஒரு சூழலுக்குள் கண்டுகொள்ள முடிந்தது. அதிகம் விட்டுக்கொடுப்புகளை வெளிப்படுத்துவது போன்று பிரதமர் நரேந்திர மோடியின் உடல் மொழியும் உரையாடல் மொழியும் காணப்பட்டது. மறுபக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏகாதிபத்தியத்தின் பிதாமகன் போன்ற மனோநிலை சந்திப்பு முழுவதும் வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக இந்தியாவினுடைய வரி தொடர்பிலும், பிரிக்ஸ் அமைப்பு பொருத்தும் அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படுத்திய விமர்சனம் அதிக விவாதத்தை உருவாக்க வேண்டியது. அதனை ஆழமாக அவதானிப்பது அவசியமானது.

முதலாவது, அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக முன்னைய ஆட்சி காலத்திலும் தற்போதும் அமெரிக்க ஜனாதிபதி அதிகமாக பிரசாவித்து வருகின்றார். அதனை வெளிப்படையாகவே நரேந்திர மோடி உடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் அதீதமான வரியை இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவும் விதிக்க திட்டமிடுவதாக குறிப்பிட்டதோடு, எதிரிகளை விட நண்பர்களே மோசமானவர்கள் என இந்திய பிரதமரை வைத்துக்கொண்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் எத்தகைய பதிலிருப்பையும் வெளிப்படுத்தாத இந்தியப் பிரதமர், வரி தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது போன்று அமைந்திருந்தது. அவ்வாறே இரு நாட்டுக்கும் இடையிலான இராணுவ உபகரணங்களை அதிகமாக வழங்கப் போவதாகவும், அமெரிக்காவிடமிருந்து பெற்ரோலியம் எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்ததோடு, அதனை கருத்தில் கொள்வதாக நரேந்திர மோடி வெளிப்படுத்தியிருந்தார். இது ஒரு வகையில் ரஷ்சிய-இந்திய உறவின் அடிப்படைகளை உடைப்பதற்கான ஒரு யுக்தியாக அமெரிக்க ஜனாதிபதி தனது உரையாடல்களை வெளிப்படுத்தி இருந்துள்ளார் என்பதை கண்டுகொள்ள முடிந்தது. ரஷ்சியாவுடன் இந்திய உறவை அதிகம் நேரடியாக விமர்சிக்காத அமெரிக்க ஜனாதிபதி, இந்தியாவினுடைய இராணுவ தளபாடங்களையும் எண்ணெய் எரிவாயுவையும் அமெரிக்கா வழங்குவதற்கு முன்வந்துள்ளது என்பதையும், அமெரிக்காவுடனான வர்த்தகத்தை இந்தியா அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார். அத்தகைய கோரிக்கைக்கு அதிக முக்கியத்துவம் இந்திய பிரதமர் கொடுக்காவிட்டால் அது சார்ந்த இராஜதந்திர சொற்பிரயோகத்தை முன்வைத்து நகர்ந்ததை அவதானிக்க முடிந்தது.

இரண்டாவது, பிரிக்ஸ் அமைப்பை நேரடியாக விமர்சனம் செய்கின்ற போது இந்தியாவின் அங்கத்துவமும் இந்திய பிரதமருக்கு முன்னால் அவமதிக்கப்பட்டது. பிரிக்ஸ் அமைப்புக்கு எதிராக நூறு வீத வரியை விதிக்கப் போவதாகவும், அதன் எதிர்காலம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், அது இறந்துவிட்டதாகவும் இந்திய பிரதமர் முன்னிலையில் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது இந்திய இராஜதந்திரத்தையும் இந்தியாவின் வெளியுறவையும் அமெரிக்கா தலையீடு செய்வதாக தென்படுகிறது. நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியா, அமெரிக்காவின் முன்னிலையில் அதிக விமர்சனங்களை அனுபவித்து இருக்கிறது என்பது ஆட்சியாளர்களின் பலவீனத்தையே காட்டுகிறது. இத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இந்திய பிரதமர் அமெரிக்காவின் நடவடிக்கை எதிர்க்க வேண்டிய தேவைப்பாடு தவிர்க்க முடியாதது ஆகும். அதனை முன் வைக்க தவறுகின்ற பட்சத்தில் பிரிக்ஸ் அமைப்பு மட்டும் அல்ல இந்தியாவின் தென் பூகோள நாடுகள் மீதும் அமெரிக்காவின் அடாவடித்தனத்தை ஏகாதிபத்திய மனோநிலையை தடுக்க முடியாது போகும். அதற்குரிய அணுகுமுறைகளை இந்தியா அடுத்து வரும் காலப் பகுதிகளில் வெளிப்படுத்த வேண்டும்.

மூன்றாவது, பிரிக்ஸ் அமைப்பின் டொலருக்கு பதிலான அல்லது பதிலீடான நாணயம் தொடர்பாக அண்மைக் காலகட்டத்தில் எழுந்திருக்கும் மாற்று எண்ணப்பாங்கை அதிகம் விமர்சித்த ட்ரம்ப், அதனால் ஏற்படப் போகின்ற அழிவுகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்ள முடியாது திணறுகிறார் என்பதை கோடிட்டு காட்டி இருந்தார். அதிக வரியை விதிப்பது தொடர்பில் அவர் விவாதிப்பது என்பது 42 வீதத்துக்கு மேலான முதலீடுகளையும் பொருளாதார வாய்ப்புகளையும் கொண்டு இருக்கின்ற, அதேநேரத்தில் பெரும் மனித வளத்தையும் கொண்டிருக்கின்ற நாடுகளாகும். அமெரிக்காவின் சந்தையாக இந்த நாடுகளே காணப்படுகின்றன. அத்தகைய சந்தைக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்ற அடிப்படையிலும், அமெரிக்கா இல்லாத ஓர் அமைப்பாக பிரிக்ஸ் காணப்படுவதையும் டொனால்ட் ட்ரம்ப் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார். அவருடைய அதிர்ச்சி அனைத்தும் டொலருக்கு மாற்றான ஒரு நாணயம் சாத்தியமாக இருந்தால், அமெரிக்காவின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததூ ஆகிவிடும் என்ற அச்சம் அவரது வெளிப்படுத்தலில் அவதானிக்க முடிந்தது. அதனை அமெரிக்க ஆட்சியாளர்கள் தற்போது கையாள ஆரம்பித்திருக்கின்றார்கள். அதன் ஒரு நகர்வாகவே இந்திய பிரதமர் உடைய அமெரிக்க விஜயத்தை அமெரிக்க நிர்வாகம் கையாண்டிருக்கின்றது.

நான்காவது, ரஷ்சியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணத்தை இந்திய பிரதமரோடு அமெரிக்க ஜனாதிபதி பகிர்ந்தமையால் தவிர்க்க முடியாமல் அத்தகைய உரையாடல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு, இந்தியா போரில் நடுநிலை வகிக்கவில்லை என்று சமாதானத்தின் பக்கம் அமைதியின் பக்கம் இருப்பதாகவும் நரேந்திர மோடி ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகிறார். ஊடக சந்திப்பில் அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாகவே உக்ரைன்-ரஷ்சிய போருக்கான முடிவையும், சமாதானத்துக்கான உரையாடலையும் ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிரதான உள்நோக்கம் ரஷ்சியாவையும் இந்தியாவையும் பிரிக்ஸ் அமைப்பில் இருந்து உடைப்பது அல்லது அதனை கையாள முனைவது என்ற அடிப்படையிலேயே அதனை விளங்கிக் கொள்ளுதல் அவசியமானது. இந்தியாவினுடைய நடுநிலை என்ற வார்த்தை மேற்கு நாடுகளுக்கு வாய்ப்பானதாகவும் தந்திரோபாயமிக்கதாகவும் அமைந்திருந்தது. அதனை நேருவின் காலத்திலிருந்து இந்தியா கடைப்பிடித்து வருகிறது. அதனால் ஏற்பட்ட பாதிப்பு இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல அனைத்து தென் பூகோள நாடுகளுக்குமானது ஆகும். இந்தியா இத்தகைய நடுநிலைமை என்ற கொள்கையை எப்போது கைவிடுமோ அப்போதே இந்தியா வல்லரசு என்ற அந்தஸ்தை அடைவதற்கான முதல் படியாக அமையும்.

ஐந்தாவது, இரு நாடுகளுக்குமான தலைவர்களின் சந்திப்பில் முக்கியமான விடயங்களில் ஒன்றாக சட்டவிரோத குடியேற்றிகள் பற்றிய அம்சம் அமைந்திருந்தது. ஆனால் அது தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இந்தியா அங்கீகரிப்பதாகவே தென்படுகிறது. ஆனால் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுவதற்கு ஒரு முறையும் நாகரீகத்தின் அடையாளமும் உண்டு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் அத்தகைய உரையாடலையாவது இந்திய பிரதமர் வெளிப்படுத்தி இருக்க வேண்டும். மாறாக கைதிகளை பரிமாற்றுவது போன்று இந்திய சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். இது மிக மோசமான நாகரீகமற்ற ஏகாதிபத்திய திமிரின் அடையாளமாகவே தெரிகிறது. குறைந்தபட்சம் இந்திய பிரதமர் இந்தியா வெளிவிவகார அமைச்சர் இதனை விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்க வேண்டும். அமெரிக்காவில் வாழ்பவர்கள் எல்லோருமே குடியேற்றவாசிகளே ஆகும். ஐரோப்பிய நாடுகளில் இருந்து படை எடுத்து, அமெரிக்க கண்டத்தின் பூர்வ குடிகளை அழித்தொழித்துவிட்டு குடியேறியவர்களே இன்றைய அமெரிக்கர்கள். அவ்வாறாயின் அவர்களே முதல் சட்ட விரோத குடியர்கள் அது அது சார்ந்த விமர்சனத்தை குறைந்தபட்சம் வெளிப்படுத்த வேண்டிய தேவைப்பாடு இந்திய பிரதமருக்கு இருந்தது.

எனவே, இந்திய பிரதமரது அமெரிக்க பயணம் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் இராணுவம் என்ற அடிப்படையில் வாய்ப்பானதாக அமைந்துள்ளது என விவாதிக்க முடியும். ஆனாலும் அமெரிக்க ஜனாதிபதியின் அணுகுமுறைகள் அனைத்தும் இந்திய அத்தகைய வர்த்தக பொருளாதார உறவு மேற்கொள்வதற்கு நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறது. அவற்றைவிட மிக முக்கியமாக இந்தியாவினுடைய பிரதமர் மற்றும் இந்தியாவினுடைய வெளியுறவு கொள்கைகள் அவமதிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்திய-அமெரிக்க நெருக்கத்திற்கு குறியீடாகும். நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் ஏகாதிபத்தியத்தினதும் அடிமைத்தனத்தினதுவும் அடையாளமாகவே காணப்படுகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

நன்றி: தினகரன்

Recommended For You

About the Author: Editor Elukainews