வலி. வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டு ஆளுநர்!

வலி. வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.
வலி. வடக்கில் மக்கள் பாவனைக்கு கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட வசாவிளான் கிழக்கு, வசாவிளான் மேற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய 5 கிராம அலுவலர் பிரிவுகளும் மக்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலைமை இன்னமும் காணப்படுகின்றது.
பாதுகாப்புத் தரப்பினரின் வேலி பின்நகர்த்தப்படாமையால் இவ்வாறான சூழல் நிலவுகின்றமை தொடர்பில் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன் இந்தப் பகுதியிலுள்ள பலாலி சித்தி விநாயகர் பாடசாலையின் இடிபாடுகளுடன் கூடிய கட்டடத்தையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த காலங்களில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தின் மைதானத்தின் ஒரு பகுதி பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ளதையும் ஆளுநர் சென்று பார்வையிட்டார்.
மயிலிட்டித்துறைமுகத்தில் இந்திய மீனவர்களது படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால் மீனவர்கள் எதிர்கொள்ளும் இடர்கள் தொடர்பாகவும் ஆளுநர் ஆராய்ந்தார்.
மயிலிட்டி வைத்தியசாலை வீதி கடந்த காலங்களில் கொங்கிரீட் வீதியாக அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை மூடி சுகாதாரத் திணைக்களத்தால் வேலி அடைக்கப்பட்டுள்ளதாக மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.
அதேபோல காங்கேசன்துறையிலுள்ள சிறுவர் பூங்காவுக்கான பாதையை பாதுகாப்புத் தரப்பினர் மூடி வைத்துள்ளமையால் எழுந்துள்ள நெருக்கடி தொடர்பாகவும் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு அருகில் பிரதேச சபையின் பாதையை மூடி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதையும் ஆளுநர் பார்வையிட்டார்.
அத்தடன் கீரிமலையிலுள்ள செம்மண்வாய்க்கால் இந்து மயானத்துக்கான பாதை பற்றைகள் மூடி உள்ளமையையும் அதனால் மக்கள் தனியார் பாதை ஊடாகச் சென்று வருகின்றமையும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் அதனையும் ஆளுநர் நேரடியாகப் பார்வையிட்டிருந்தார்.
இது தொடர்பில் துறைசார் தரப்புக்களுடன் கலந்துரையாடி தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநர் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews