
இலங்கை அரசியலில் வரவு-செலவுத் திட்டம் அதிக முக்கியத்துவத்தை பிரதிபலித்து உள்ளது. கடந்த கால அரசாங்கங்களை போன்று புதிய அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக வரவு-செலவுத் திட்ட அறிக்கையை முன்மொழிந்துள்ளது. அதேநேரம் இவ் வரவு-செலவுத் திட்ட அறிக்கையின் உள்ளார்ந்த அர்த்தங்கள் தொடர்பான புரிதல்கள் இன்றி அதன் தனித்துவம் முதன்மைப்படுத்தப்படுகிறது. இவை எல்லாவற்றையும் கடந்து வரவு-செலவு திட்டத்திற்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முக்கியம் பெற தொடங்கியுள்ளது. தென்னிலங்கை பாதாள உலக குழுக்களின் நெருக்கடிக்கு உள்ளாகி கொண்டிருக்கின்ற போது, வடக்கு-கிழக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக உபாயங்களை கட்டமைக்க முயலுகின்றது. இக்கட்டுரையும் தமிழ் கட்சிகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராவதில்காணப்படும் பலவீனத்தை தேட முடியலுகிறது.
பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி, கிழக்கை விட வடக்கில் அதிகமான ஆசனங்களை பெற்றுக் கொண்டது. தமிழ் அரசியல் கட்சிகள் வடக்கில் அதிகம் தோற்றுப் போனது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி ஒரு அரசியலை உருவாக்கியுள்ளது. புலத்திலும் புலம்பெயர்ந்த தளத்திலும் ஈழத்தமிழர்களிடை, தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கை வடக்கு கிழக்கில் பலவீனப்படுத்த வேண்டும் என்ற விவாதங்கள் அதிகமாகியுள்ளது. இதற்காகவே தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைவதும், ஒரு சின்னத்தில் போட்டியிடுவதும் பற்றி கட்சிகளின் கொள்கைகளைக் கடந்து ஒன்றிணைவது என்ற சுலோகங்களோடு உரையாடல்களை எல்லா தரப்பும் முன்னெடுத்து வருகிறது. சில கூட்டணிகள் தோன்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அது உடைந்து போவதாகவும், ஒப்புதல் அளித்துவிட்டு பின்னர் அதனை நிராகரிப்பதாகவும் வடக்கின் அரசியல் களம் காட்சி தருகின்றது. இதற்கு பின்னால் இருக்கும் பிரதான எண்ணத்தையும் அதன் பலவீனங்களையும் கண்டறிவது ஈழத்தமிழருடைய அரசியலில் போக்கினை புரிந்து கொள்ள உதவக்கூடியது.
முதலாவது, பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வரவிருக்கும் அரசியலமைப்பு தொடர்பில் கூட்டணி ஒன்றை அமைப்பது தமிழரசியல் கட்சிகளுக்கு இடையில் ஒரு உரையாடல் நிகழ்ந்தது. பின்னர் அந்த உரையாடலின் அடிப்படை பலவீனப்படுகின்ற சூழலை ஏற்படுத்துகின்ற விதத்தில் இன்னொரு அணி திரட்டல் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டது. அத்தகைய அணி திரட்டலும் முரண்பாடுகளின் பிரதிபலிப்பாக பலவீனம் அடைந்து வாய்ப்புகளை இழந்துள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயமாகும். அரசியல் கட்சிகள் கூட்டிணைவதனால் மக்களிடம் ஆதரவை பெற்று விடலாம் என கருதுகின்றனர். கடந்த காலத்திலும் சமகாலத்திலும் அவர்களது அரசியல் நடத்தை சார்ந்த வெளிப்பாடுகளை மதிப்பீடு செய்யவும், சுய விமர்சனம் செய்யவும் அவர்கள் ஒருபோதும் தயாராக இல்லை. வெளிப்படையாக கூறுவதானால், கடந்த காலத்தில் தேசியம் என்ற அடிப்படைக் கொள்கையில் இயங்கிய அனைத்து தரப்புகளும் போலியாக கட்சிகளின் கொள்கைகளாக அரவணைத்துக் கொண்டன. அத்தகைய கொள்கைகள் நடைமுறைக்கு உதவாதது மட்டுமின்றி, தேசியம் என்பதன் அடிப்படையான அம்சத்தைக் கூட முதன்மைப்படுத்தவில்லை. பிரதேசமாக, சாதியமாக, மதமாக மக்களை அணுகினார்களே அன்றி; இவை எல்லாவற்றையும் கடந்து ஒன்று திரட்ட வேண்டிய தேசிய அடையாளத்துக்குள் மக்களை அணி திரட்டுகின்ற எத்தகைய பணியையும் அவர்கள் முன்னெடுக்க தயாராக இருக்கவில்லை. மாறாக கட்சிகளின் இருப்பையும், தமது உறுப்பினர்களின் வெற்றிகளையும், கட்சியின் உறுப்புரிமையை அதிகப்படுத்துவதையும், அதற்கான உரிமை கோரல்களை பற்றியுமே அதிக கவனம் கொண்டனர். அத்தகைய கவனத்தின் விளைவு, மக்களை ஒன்று திரட்டாமல் மக்களை ஐக்கியப்பட வைக்காமல் மக்களோடு சேர்ந்து பயணிக்காமல் கட்சிகளையும் கட்சியின் கொள்கைகளையும் தேர்தல் உத்தியோடு முன்னிறுத்திக் கொண்டு, தேசியத்தை பகுதி நேர தேர்தல் கால அரசியல் சுலோகமாக பின்பற்றி வந்தனர். இதன் விளைவு அவர்களது தோல்விக்கும், மக்களது தோல்விக்கும், மக்கள் அவர்கள் மீது கொண்டுள்ள வெறுப்புக்கும் அடிப்படை காரணமாக தெரிகின்றது.
இரண்டாவது, வடக்கு-கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகள் குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் மக்களோடு இணையும் சந்தர்ப்பம் தேர்தல் மட்டுமே ஆகும். தேர்தல்களே கட்சிகளின் இலக்காக அமைகின்றது. அத்தகைய இலக்கை அடைவதற்கான முறைகளையும், உத்திகளையும் தமிழ் கட்சிகள் வரையறுத்துக் கொண்டுள்ளது. மக்களது துயரங்களிலும், அவர்களது நெருக்கடிகளிலும் அவர்களுக்கான ஆதரவை வழங்குவோர்களாக கட்சிகளோ அல்லது கட்சிகளின் கொள்கைகளோ காணப்படவில்லை. மக்களின் துயரங்களில் நேரடியாக உதவுகின்ற சக்திகளாக எந்த அரசியல் கட்சிகளும் தமது கொள்கைகளையும் தமது அரசியல் இலக்குகளையும் வரையறுத்துக் கொள்ளவில்லை. மக்களின் துயரங்களில் உளரீதியான பங்காளர்களாக தனிப்பட்ட ரீதியில் சில கட்சிகளின் உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மட்டுமே இயங்குகின்றனர். அதிலும் ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் தனது வாக்காளர் இலக்கு வைத்து அவர்களது உளவியலை கண்டறிந்து, அத்தகைய உளவியலை நெருக்கடுகளை தீர்த்துக் கொள்ள முயல்கின்றனர். அதனைக் கடந்து கட்சியாக சாதாரண மக்களை நோக்கி நகர்வதற்கு உத்திகளை எந்த தமிழ் கட்சியும் வகுக்காத சூழல் ஒன்றையே காண முடிகிறது. மக்களின் பொருளாதார நெருக்கடி; தென்னிலங்கை ஏற்படுத்தும் அரசியல் சமூக பண்பாட்டு நெருக்கடி; மத அடிப்படையிலான மேலாதிக்க அணுகுமுறை; போர்க்கால பகுதியில் நிகழ்ந்த துயரங்களின் முயற்சியாக நிகழும் நெருக்கடிகள் எதனையும் தீர்த்துக் கொள்ளும் விதத்தில் தமிழ் கட்சிகள் மக்களை அணுகவில்லை. மாறாக மக்கள் தமக்கு வாக்கு போடுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு பயணிப்பார்கள் என கட்சிகள் கருதுகின்றனர். அதன் விளைவு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்விக்கான பிரதான காரணமாகும். இவர்கள் மக்களோடு எந்த விதத்திலும் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதை காட்டத் தவறுவதோடு, தேர்தல் மேடைகளையும்-பொது மேடைகளையும்-பாராளுமன்றத்தையும் -தூதரகங்களையும் மட்டுமே எதிர்கொள்கின்றனர். மக்களை எதிர்கொள்வதற்கான திராணி அற்றவர்களாக கட்சிகளும் கட்சிகளின் கொள்கைகளும் காணப்படுகிறது. இதன் நீட்சியே உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் நிகழப் போகின்றது.
மூன்றாவது, கடந்த தேர்தல்களில் விட்ட அதே தவறுகளை மீளவும் தமிழ் கட்சிகள் பின்பற்ற விளைகின்றன. கூட்டுக்களை பலப்படுத்தி மக்கள் போடுகின்ற வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியும் என கணக்கு போட்டுள்ளனர். எந்த கட்சியும் மக்களிடம் சென்று மக்களுடைய விருப்புக்கு உட்பட்ட விதத்தில் அவர்களுடைய துயரில் பங்கெடுத்துக் கொண்டு தேர்தலில் மக்கள் விரும்புகின்ற வேட்பாளர்கள் நிறுத்துவதற்கு தயார் அற்ற சூழலில் கூட்டுக்களைப் பற்றி உரையாடுகின்றனர். இத்தகைய கூட்டுக்களால் மாற்றத்தை சாத்தியப்படுத்த முடியுமா என்பது மிகப் பிரதானமான கேள்வியாக அமைகின்றது. கூட்டுக்களின் வடிவங்கள் கொள்கை அளவிலோ அல்லது தேசியம் என்ற எண்ணத்தின் அளவிலோ வடிவமைக்கப்படாத ஒரு நிலையை நோக்கி ஈழத்தமிழர் அரசியல் நகர்கின்றது. கட்சிகளும் அவர்களுடைய அணுகுமுறைகளும் அத்தகைய சூழலுக்குள் பயணிக்க தொடங்கியுள்ளது. இதேநேரம் தேசிய மக்கள் சக்தி வடக்கின் கரையோர பிரதேசங்களையும், விவசாய மக்களையும் பெருமளவுக்கு தன்னுடைய செல்வாக்குக்குள் கொண்டு வந்துள்ளது. அவர்களது தேவைகளை கண்டறிவதும், அதற்கான உளரீதியான ஆலோசனைகளை வழங்குவதும், அவர்களோடு சேர்ந்து பயணிப்பதும் என ஒரு ஆழமான ஈடாட்டத்தை கொண்டு செல்ல ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவு கடந்த பாராளுமன்றத் தேர்தலை விடவும் வலிமையானதாக மாறும் என்ற நிலைப்பாடு தோன்றியுள்ளமை தவிர்க்க முடியாது காணப்படுகிறது. இத்தகைய சூழலுக்குள் தமிழ் மக்கள் பயணிக்க வேண்டிய நிர்பந்தத்தை அரசியல் கட்சிகள் ஏற்படுத்த தொடங்கியுள்ளன. மிகப் பிரதானமாக கருத்தியல் ரீதியில் தேசிய இருப்பை நிராகரிக்கின்ற அல்லது கடந்த காலத்தின் நிராகரித்த தரப்புக்களை முன்னிலைப்படுத்துவதும், தேசியத்தை போலித்தனமாக உரையாடுவதும் மக்களின் போக்கில் மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படைகளாகும்.
எனவே, தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக ஒன்றிணைவதனால் மக்கள் ஆதரவை திரட்ட முடியும் என கணக்கு போடுகின்றன. அது அவர்களது கடந்த கால அனுபவங்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாத துயரமான விளைவாகும். மக்களையும் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் கண்டுகொள்ளாத அரசியல் கூட்டுக்களால் எந்தப் பயனையும் சாத்தியப்படுத்தி விட முடியாது. கட்சிகளுக்கு இடையிலான அணிதிரட்டல் என்பது போலித்தனமான தேர்தல் கூட்டுக்களே அன்றி, மக்களின் வலிகளை தீர்க்கும் கூட்டுக்களாக அவற்றைக் கொள்ள முடியாது. இத்தகைய பலவீனமான சூழலுக்குள்ளால் கூட்டுக்களுக்குள் உடன்பாடற்ற தன்மையும், தேர்தல் கூட்டுக்களின் போலித்தனமும் உள்ளூராட்சி தேர்தலில் மேலும் கட்சிகளின் பலவீனத்தை வெளிப்படுத்தும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-