கரைச்சி பிரதேச சபையினால் புதிதாக கட்டப்பட்ட கடைகளுக்கு கோரப்பட்ட விலைமனுக்கோரலை இடை நிறுத்தி வைக்குமாறு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவு..!

கரைச்சி பிரதேச சபையினால் புதிதாக கட்டப்பட்ட கடைகளுக்கு கோரப்பட்ட விலைமனுக்கோரலை இடை நிறுத்தி வைக்குமாறு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கடந்த 11ம் திகதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமது கடைகளை மூடி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக காணப்பட்ட நீண்டகாலமாக தற்காலிகமாக தகரக் கொட்டகைகளில் வர்த்தகத்தில் ஈடுபடும் புடைவை, அழகுசாதன மற்றும் ஏனைய வாணிப வர்த்தகர்களுக்கு நிரந்தரக் கட்டடத்தை கட்டி வழங்குவதாக பலதரப்பினராலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை காலமும் அவை நிறைவேற்றப்படவில்லை.
தற்போது உலக வங்கியின் அனுசரணையில் ரூ40மில்லியன் நிதியில் மேற்படி வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கரைச்சி பிரதேச சபையால் திட்டமிடப்பட்டு 08 கடைகள் அமைக்கப் பெற்று தற்போது வர்த்தகர்களுக்கு எதுவித பயனும் இன்றி கேள்வி கோரல் மூலம் (டென்டர்) கடைகளை வழங்க பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளமையானது வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் செயலாகும். என தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வர்த்தகர்கள் சார்பாக எழுத்தானை மனுவை தாக்கல் செய்த போதே எழுத்தானை மனுவை பரீசிலித்த நீதவான் குறித்த விலை மனுக்கோரலை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டார்.
தொடர்ந்தும் வர்த்தகர்கள் ஏனைய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏனைய கோரிக்கைகளாக
02. 04.06.2024 அன்று வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் வர்த்தகர் அபிவிருத்திச் சங்க மற்றும் உள்ளூராட்சித் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட்ட தற்காலிக கடைகளை A9 வீதியையும், கனகபுர வீதியையும் பார்க்கக் கூடியவாறு வழங்குதல் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
03. ஏற்கெனவே அரச திணைக்களத்தால் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் கிளி சேவைச்சந்தை வர்த்தகர்களுக்கு கட்டடங்களைக் கட்டி வாழ்வாதார கடைகளாக வழங்குவதாகவே உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தது. இவ்விடயத்தில் வர்த்தகர்களாகிய நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
04. பொதுவாக கிளிநொச்சி சேவைச்சந்தையின் பிரதான மரக்கறி வாணிபம், மீன் வாணிபம், புலால் வாணிபம், பழ வாணிபம் போன்றவற்றுக்கு இடையூறாக சேவைச்சந்தையினை அண்மித்த பகுதிகளில் மேற்படி வியாபாரங்களை மேற்கொள்ள கரைச்சி பிரதேச சபை அனுமதித்துள்ளமையால் சேவைச்சந்தை வர்த்தகர்கள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர்.
05. அம்பாள்குளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் மொத்த வியாபாரம் எனப் பெயரிடப்பட்டு தற்போது அங்கு காலை 5.00 மணி தொடக்கம் மாலை 10.00 மணி வரை சில்லறை வியாபாரம் நடைபெற்று வருதலும் அங்கு வரிநடைமுறை பின்பற்றப்படாமையால் சேவைச்சந்தைக்கு உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் வருகை தரும் வீதம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது.
06. கிளிநொச்சி சேவைச்சந்தையின் மரக்கறி, வெற்றிலை. மீன். பழ வாணிபம் அனைத்து வாணிபங்களுக்கும் 4% சதவீத வரி அறவீட்டால் உற்பத்தியாளர்களின் வருகையும், சந்தைப்படுத்தும் வாய்ப்பும் குறைந்துள்ளது.
07. கிளிநொச்சி சேவைச்சந்தையை அண்மித்த பகுதியில் நடைபெறும் நடைபாதை வியாபாரங்களால் சேவைச்சந்தை முற்றுமுழுதாக செயல் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
08. கரைச்சி பிரதேச சபையால் நிரந்தர கட்டடங்களுக்கான முறையற்ற திட்டமிட்ட இடவாடகை அதிகரிப்பும் சேவைச்சந்தை வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews