பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் இறுதிக் கிரியையகள் இன்று மாலை கனேமுல்ல பகுதியில் இடம்பெறவுள்ளன.
பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் முகாமையாளராக கடமையாற்றிய பிரியந்த குமார தியவடன, மத நிந்தனை செய்ததாக கூறி அவரை நூற்றுக்கணக்கானோர் கொடூரமாக கொலை செய்திருந்தனர்.
சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடன, கொலையாளிகளினால் பின்னர் எரியூட்டப்பட்டார்.
இந்த நிலையில், இந்த விடயம் சர்வதேச அரங்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வாறான நிலையில், சம்பவம் தொடர்பில் 130திற்கும் அதிகமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், 26 பேர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பிரியந்த குமாரவின் உடல் எச்சங்கள் நேற்று முன்தினம் மாலை நாட்டை வந்தடைந்தது.
உடல் எச்சங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடத்தப்பட்டதுடன், சடலம் சீல் செய்யப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் சடலம் மக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மாலை அன்னாரது இறுதி கிரியைகள் இடம்பெற உள்ளன.