இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த ஹெலிகொப்டர் தமிழகத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதன்போது இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான போது அதிலிருந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தை கடைசியாக உயிருடன் பார்த்ததாகவும், அவர் பேசியதை கேட்டதாகவும் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை மதியம் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானபோது, அதன் அருகே சிவக்குமார் என்பவர் சென்றதாகவும், எரிந்துகொண்டிருந்த ஹெலிகொப்டரில் இருந்த மூன்று பேர் வெளியே வந்ததாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பக்கத்தில் ஒரு ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக எனது மைத்துனர் கூறினார். நான்காம் பக்கத்தில் இருந்ததால் சம்பவ இடத்துக்கு சென்றோம். அங்கு ஹெலிகொப்டர் இரண்டாகப் பிளந்து தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது.
20 அடி உயரத்திற்கு நெருப்பு எரிந்ததால் எங்களால் அருகில் செல்ல முடியவில்லை. நாங்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தோம்.
அதன்பிறகு, யாரேனும் உயிருடன் இருந்தால் காப்பாற்றலாம் என அருகில் சென்றோம், அப்போது ஹெலிகொப்டரில் இருந்து மூன்று பேர் வெளியே வந்து விழுந்து கிடந்தனர். எங்கள் எல்லோராலும் விபத்து பகுதிக்கு செல்ல முடியவில்லை.
நான் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சி பெற்றவன் என்பதால், நான் மட்டும் சென்று பார்த்தேன். முன்று பெரும் தீக்காயங்களுடன் உயிரோடு இருந்தனர்.
“மிகப்பெரிய தளபதி, நம் தேசத்தை காப்பாற்றுபவர், அவர் என்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டு கொடுக்க முடியவில்லையே என மிகவும் வருத்தப்பட்டேன், பின்னர் அவர் இறந்துவிட்டார் என கேள்விப்பட்டதும் என்னால் இரவு முழுவதும் தூங்கமுடியவில்லை” என்றும் கூறினார்.