ஒலிம்பிக் போட்டிகள், பாராஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும்போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்தப் போட்டிகளைக் காண சிறப்பு தூதர்களாக பங்கேற்பார்கள்.
இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், சின்ஜியாங்கில் நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், பிற மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றைக் கண்டிக்கும் விதத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜாங்க ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
இதன்மூலம் சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அமெரிக்கா, தூதர்களையோ அதிகாரபூர்வ பிரதிநிதிகளையோ அனுப்பாது. அமெரிக்காவின் இந்த முடிவைக் கண்டித்த சீனா, அமெரிக்கா இதற்கான விலையைக் கொடுக்கும் என எச்சரித்தது.
இந்தநிலையில், தற்போது அவுஸ்திரேலியாவும் சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜாங்க ரீதியாகப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
சீனாவின் சின்ஜியாங்கில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அவுதிரேலியா தொடர்ந்து எழுப்பிவரும் பல்வேறு பிரச்சினைகளுக்குப் பதில் நடவடிக்கையாக அவுஸ்திரேலியா இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறியுள்ள அந்தநாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன், அவுஸ்திரேலியாவின் தேசிய நலன் கருதி இதை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜாங்க ரீதியில் புறக்கணித்திருப்பது சீனாவுக்கு சர்வதேச அரங்கில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.