யாழ்.வலி,வடக்கு காங்கேசன்துறை, பலாலி, தெல்லிப்பழை பகுதியில் கோவில்களில் இருந்து திருடப்பட்ட விக்கிரகங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதன்படி இதுவரை 7 விக்கிரகங்கள் திருடப்பட்டிருக்கின்றது. இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவங்கள் மதரீதியான முரண்பாடுகளை உருவாக்குவதற்கா?
அல்லது திருட்டு கும்பல்களின் வேலையா? என்பது தொடர்பாக விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்த நிலையில் மாவிட்டபுரம் – நல்லிணக்கபுரத்தை சேர்ந்த சிலை திருடன் சிக்கியிருக்கின்றார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தொிவிக்கின்றன. இதன்படி இந்த சிலை திருட்டு சம்பவத்தில் உள்ள நபர் ஒரு இரும்பு வியாபாரி எனவும்,
அவரே சிலை கடத்தலின் பின்னணியில் இருந்துள்ளார். குறித்த வியாபாரி யாழ்.நகரை அண்மித்த பகுதியில் பழைய இரும்பு விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
இதற்கிடையில் நேற்று மாலை சந்தேகநபர் இருந்த இடத்தை அதிரடியாக முற்றுகையிட்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில்,
திருடப்படும் விக்கிரகங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகள் பேருந்துகள் மூலம் கொழும்புக்கு கடத்தப்படுவதாகவும் அங்கிருந்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் 2 சிலைகளை மீட்டுள்ள பொலிஸார் சிலைகளை கொழும்புக்கு கடத்துவதற்கு உதவும் பிரதான நபர் ஒருவருக்கு வலை விரித்துள்ளதுடன், துரித விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.