புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இணைந்த சேவை வழங்குவதற்கான கூட்டம் இணக்கப்பாடு இன்றி முடிவடைந்தது. நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாலை இடம்பெற்ற கூட்டமே இவ்வாறு இணக்கப்பாடு எட்டாமல் முடிவடைந்தது. இலங்கை போக்குவரத்து சபையினரும் தனியார் பேருந்து உரிமையாளர்களும்,
புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து சேவையை வழங்குவதற்கு மறுத்து வந்தன. யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இருதரப்பினரையும் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சேவையை வழங்குவதற்காக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற நிலையில் அதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் அண்மையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில்
இடம்பெற்ற கூட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் தனியாருடன் இணைந்து சேவையை வழங்குவதற்கு நேரடியாகவே மறுப்பைத் தெரிவித்த நிலையில் குறித்த கூட்டமும் தீர்மானம் இன்றி முடிந்தது.
இந்நிலையில் தை மாதம் 15ஆம் திகதி முதல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தாம் புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சேவையை வழங்குவதாக அறிவித்திருந்தனர்.
எனினும் நேற்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தாம் தனியான சேவையை வழங்கமாட்டோம் எனத் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு இணக்கப்பாடு இன்றி முடிவடைந்த கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதான் கொழும்புடன் கலந்துரையாடி முடிவொன்றை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்..