மோட்டார் சைக்கிளில் பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற இரு பிள்ளைகளின் தாய் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் பகமூன, கங்கேயாய வீதியில் சிரகந்துயாய பிரதேசத்தில் வைத்து பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளதாக பகமூன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கங்கேயாய, கோட்டபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சாந்தனி மதுஷானி (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பகமூன, கங்கேயாய பிரதேசத்திலிருந்து தம்புள்ளையை நோக்கி பயணித்த பஸ் ஒன்று சிரகந்துயாய பிரதேசத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது,
பஸ்ஸின் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் பஸ்ஸை முந்திச் செல்ல முயற்சித்துள்ளது.
அதன்போது வீதியில் வழுக்கிச் சென்று வீதியில் புரண்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பஸ்ஸில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த அவரின் பிள்ளைகள் இருவரும் கீழே விழுந்துள்ளதுடன் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.