முன்பள்ளி மனித வாழ்வின் படிநிலையில் முக்கியமான கட்டமாகும் என லைவ் பவுண்டேஷன் இயக்குநர் அ.பெஸ்ரியன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அல்வாய் வடக்கு மகாத்மா கிராம முன்பள்ளிக்கு ஜெர்மனியில் வதியும் தனது சகோதரி சுபிதா ஜெராட் ஜெஸ்டின் அவர்களின் பிறந்தநாளில் அவர் சார்பாக ரூபா 40000/- பெறுமதியான கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தபின் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது! முன்பள்ளி மனித வாழ்வின் படிநிலையில் முக்கியமான கட்டமாகும். அக்காலத்திலேயே குழந்தைகள் உடல், உள, சமூக ரீதியாக வலுவானவர்களாக உருவாக்கப் படுகின்றனர். எனவே, வளமான எதிர்கால சந்ததியினரை, இளைஞர்களை உருவாக்க இம்முன்பள்ளியும் பெற்றோர்களும் உழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் மங்கல விளக்குகளை அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கம், மருத்துவர் க.பவணந்தி, முன்பள்ளி ஆசிரியை திருமதி சுகந்தினி ஜெகதாசா, மாலை நேர கல்வித்துறையில் ஆசிரியை அருணா கந்தசாமி, கராத்தே, யோகா ஆசிரியர் பே.வில்வம் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து கருத்துரைகளை பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட அரசியல் ஆய்வாளரும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி.அ ஜோதிலிங்கம், மருத்துவர் கதிரேசு பவணந்தி, லைவ் பவுண்டேசன் ஸ்தாபகர் அல்பேட் பெஸ்ரியன், அல்வாய் வடக்கு கிராம அலுவலர் திரு. அரவிந்தராம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சங்கீதன், சமூக விஞ்ஞான ஆய்வு மைய செயற்பாட்டாளர் திரு. கமலகாந்தன், வடமராட்சி வலய முன்பள்ளி கல்வி பணிப்பாளர் திரு. சத்தியசீலன், மாலை நேர கல்வித்திட்ட இணைப்பாளர் திருமதி கோபனா, யோகா மற்றும் கராத்தே ஆசிரியர் பே.வில்வம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
இதே வேளை அங்கு கருத்து தெரிவித்த லைவ் பவுண்டேஷன் உறுப்பினரும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய செயற்பாட்டாளருமான மருத்துவர் க. பவணந்தி, சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் ‘நாம் செய்வோம்’ நிகழ்ச்சித் திட்ட செயல்பாடுகளின் போதோ மகாத்மா முன்பள்ளி சமூகத்தின் நிலைமையினை அறிந்து கொண்டு, அதற்கமைய முதல்கட்டமாக இவ் அன்பளிப்பு வழங்கப்பட்டதாகவும் முன்பள்ளியின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் பட்சத்தில் தொடர்ந்து உதவிகளை தமது நிறுவனம் ஊடாக வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என சுமார் 150 பேர்வரை கலந்து கொண்டனர்.