நேற்று(சனிக்கிழமை)தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய கூட்டமொன்று கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கட்சியினுடைய செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்துரையாடிபோது இடைநடுவே ஆனந்தசங்கரி, வெளியேறியதாகவும், அதன் பின்னர் அங்கு கூடியிருந்த ஏனைய உறுப்பினர்கள் புதிதாக ஒரு தற்காலிகமான ஒரு நிர்வாகத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று மாலை 6 மணியளவில் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கட்சியின் ஒரு பிரிவினர் கட்சிக்கு தற்காலிகமாக புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ததாக தெரிவித்தனர்.
இதன்போது பங்கேற்று கருத்து தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ச.அரவிந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும், செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும், புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய விசேட பொதுச்சபைக் கூட்டம் கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கட்சி தலைமைத்துவத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும்
கட்சியினுடைய நிர்வாக நடவடிக்கையை சரியான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அதற்கு முட்டுக்கட்டையாக செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி செயற்பட்டதன் காரணமாக அந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.
2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின் பின்னர் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பொதுக்கூட்டத்தை கூட்டி கட்சியில் புதிய நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவந்து கட்சியை தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொண்டு முன் கொண்டு செல்ல வேண்டுமென
நாங்கள் எடுத்த முயற்சியை இரண்டு ஆண்டுகளாக கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தை நடத்தாமல் பலவிதமான முட்டுக்கட்டைகளை போட்டு கொண்டு இன்றுவரை பல இடர்பாடுகளை தோற்றுவித்தார். தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும் செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி தீர்க்கமான முடிவை எடுப்போம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரியை தொடர்பு கொண்டபோது புதிதாக தெரிவானதாக கூறப்படும் நிர்வாகம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.