மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கை கடற்படையால் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக அரசுடைமையாக்கப்பட்ட பல இந்திய மீனவர்களின் படகுகள்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து சில தினங்களுக்கு வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏலம் விடுவதற்கு இலங்கை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறது.
இந்தச் செயற்பாடு காலம் கடந்ததாக இருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஒருசில நாட்டுப்படகுகளும் இதனுள் இருப்பதாக அறிகிறோம். இலங்கையின் சட்டம் என்று வரும்போது நாட்டுப்படகு,
விசைப்படகு என எல்லாம் ஒன்றுதான். இதனால் தமிழ்நாட்டில் உள்ள சாதாரண மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.அரசியல் செல்வாக்குள்ள தமிழ்நாட்டு முதலாளிகளே இழுவைமடி தொழிலை இங்கு ஊக்குவிக்கின்றனர்.
அவர்களது படகுகளே இதனால் பாதிப்படையும்.நேற்றைய தினமும் பருத்தித்துறை தொடக்கம் மருதங்கேணி வரையிலான பகுதிகளில் பல நூறு படகுகளில் இந்திய மீன்பிடி படகுகள் அத்துமீறி வந்ததை அவதானிக்க முடிந்தது.
இதனால் உள்ளூர் மீனவர்கள் அச்சத்திலேயே தொழிலுக்குச் செல்லாமல் திரும்பி வந்து விட்டனர். அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்