தமிழர்களும் முஸ்லீம்களும் எதிர்காலத் தலைமுறை பற்றி சிந்திப்பது அவசியம். சி.அ.யோதிலிங்கம்.

தமிழ்த்தேசிய கட்சிகளும் மலையக முஸ்லீம் கட்சிகளும் இணைந்து
இந்திய அரசிற்கு அனுப்பவிருந்த ஆவணம் முஸ்லீம் கட்சிகள்
கையொப்பமிட தயங்குவதால் பின்நிலைக்குச் சென்றுள்ளது. 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி இந்தியாவைக் கோரவிருந்த ஆவணம்
பின்னர் “இலங்கை இந்திய ஒப்பந்தமும் தமிழ் மக்களின் அபிலாசைகளும்”
என தமிழரசுக்கட்சியால் மாற்றப்பட்டதாலேயே இப்பின்னடைவு
ஏற்பட்டுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி கோருவது முஸ்லீம் மக்களின் அபிலாசைகளைப் பாதிக்கும் என முஸ்லீம் தலைமைகள்
கருதுவதே இதற்கு காரணம்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் முஸ்லீம் மக்களின் அபிலாசைகளை சிறிது
கூட கவனத்தில் எடுக்கவில்லை என்ற கருத்து ஒப்பந்த காலத்திலேயே முஸ்லீம் தலைவர்களினாலும்  முஸ்லீம் கல்வியாளர்களினாலும் முன்வைக்கப்பட்டது.

சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் எழுச்சி கூட அதனடிப்படையிலேயே
ஏற்பட்டது எனலாம். முஸ்லீம் தேசியவாதத்தின் உருவாக்கத்திற்கும் அது வித்திட்டது எனக் கூறலாம். முஸ்லீம் தேசியவாதம் பெருந்தேசிய
வாதத்திற்கு எதிராக எழுச்சியடையவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்திற்கு
எதிராகவே எழுச்சியடைந்தது.
எனவே முஸ்லீம் தரப்புடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தை
முன்னெடுக்கும் போது முரண்படுகின்ற விடயங்களிலிருந்து தொடங்க முடியாது. ஒத்துப் போகின்ற விடயங்களிலிருந்தே தொடங்க முடியும். இலங்கை இந்திய ஒப்பந்தம் முஸ்லீம் தரப்பின் அபிலாசைகளை கவனத்திலெடுக்கவில்லை என்பதற்கு அப்பால் வடக்கு – கிழக்கு இணைப்பு
பற்றியும் அது பேசுகின்றது. முஸ்லீம்களின் பொது உளவியல் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஆதரவானதல்ல. அவர்களை ஆதரவாகக் கொண்டு வருவதற்கான
முன்னெடுப்புக்களும் தமிழ்த்தரப்பிலிருந்து போதியளவிற்கு இடம் பெறவில்லை.
தமிழ் – முஸ்லீம் உறவு பற்றி பேசும் போது யதார்த்த நிலையை
நாம் புறக்கணிக்க முடியாது. வடக்கு – கிழக்கிற்கென தமிழ் மக்களினால்
நகர்த்தப்பட்ட தமிழ்த்தேசிய அரசியலோடு முஸ்லீம் மக்கள் இணையவில்லை.
அவர்கள் வெளியே தான் நின்றனர். நபர்களாக ஒரு சிலர் மட்டும்
பங்கேற்றனரே தவிர முஸ்லீம் சமூகம் வெளியே தான் நின்றது. இது
விடயத்தில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தமது தனித்துவத்தை இழக்காது உருவாக்கப்பட்ட “தமிழ் பேசும் மக்கள்” என்ற தந்தை செல்வாவின் கோட்பாடு நடைமுறையில் வெற்றியளிக்கவில்லை.  இந்த பொது
அடையாளத்திற்குள் வருவதற்கு முஸ்லீம் மக்கள் தயாராக இருக்கவில்லை.
அவர்கள் தமிழ் மக்களோடு எந்த வகையிலும் தொடர்பற்ற மத
அடிப்படையிலான தனியான இனமாகவே தங்களை அடையாளப்படுத்தினர்.

முஸ்லீம் மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் “ தமிழ்
பேசும் மக்கள்” என்ற கோட்பாடு வடகிழக்கில் படுதோல்வியடைந்தது. அது தமிழ் மக்களுக்கு பொறுப்பையும் முஸ்லீம் மக்களுக்கு
பொறுப்பின்மையையும் விதித்தது. மறுபக்கத்தில் கிழக்கு தமிழ் மக்களுக்கு இக்கோட்பாடு கைவிலங்காக மாறியது.
இன்றைய நிலையில் தமிழ்த்தேசிய அரசியலோடு இணைவதற்கு
முஸ்லீம் தரப்பில் பல தடைகள் காணப்படுகின்றன. அதில் முதலாவது வடக்கு – கிழக்கிற்கென தனியான முஸ்லீம் அரசியல்
கட்டியெழுப்பப்படாமையாகும். முழு இலங்கைக்குமான முஸ்லீம் அரசியலே
கட்டியெழுப்பப்பட்டது. இதனால் தமிழ்த்தேசிய அரசியலின் மூலக் கருத்துக்களோடு இணைவது தெற்கிலுள்ள முஸ்லீம்களைப் பாதிக்கும் என அவர்கள்
அஞ்சுகின்றனர். வடக்கு கிழக்கிற்கென தனியான முஸ்லீம்
அரசியலையும், தென்னிலங்கைக்கென தனியான முஸ்லீம் அரசியலையும்,
நகர்த்தியிருந்தால் தமிழ்த் தரப்போடு இணைந்து செயற்படுவதில்
அவர்களுக்கு பெரிய தடைகள் இருந்திருக்காது.
இரண்டாவது தடை எதிர்ப்பு அரசியலுக்கு முஸ்லீம் சமூகம் தயாரில்லாத நிலையாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை எதிர்ப்பு அரசியல் என்பது தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு கலாச்சாரமாகிவிட்டது. தமிழரசுக் கட்சிக் காலம், பின்னர் ஆயுதப் போராட்ட காலம், என எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு அதற்கு உண்டு. முஸ்லீம் மக்கள் வரலாற்று ரீதியாகவே எதிர்ப்ப அரசியலுக்கு தயாராக இருக்கவில்லை. அவர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் இணைந்த அரசியலையே முன்னெடுக்கின்றனர். கால நிர்ப்பந்தம் காரணமாக முஸ்லீம் கட்சிகளின் தலைமைகள் எதிர்ப்பு அரசியல் களத்திற்குள் நின்றாலும் இரண்டாம் மட்டத் தலைவர்கள் ஆளும் கட்சி அரசியலையே முன்னெடுக்க முனைகின்றனர். இன்று
ரவூப்ஹக்கீமுக்கும், ரிசாத்பதியுதீனுக்கும்  இது விடயத்தில் கையறு நிலையே ஏற்பட்டுள்ளது. இரு தலைவர்களும் எதிர்ப்பு அரசியல் களத்தில் நிற்க கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் நிற்கின்றனர்.
மூன்றாவது வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டால் நாம் பல வீனமான சிறுபான்மை ஆகிவிடுவோம் என முஸ்லீம் மக்கள் கருதுகின்றனர்.

கிழக்கில் தற்போது இரண்டாவது பெரும்பான்மையாக இருந்தாலும் பத்து வருடங்களுக்குள் நாம் முதலாவது பெரும்பான்மை ஆகிவடுவோம் என்ற கருத்து
அவர்களிடம் உள்ளது. அவர்களைப் பொறுத்தவரை வடக்கு தமிழர்களுக்கு! கிழக்கு முஸ்லீம்களுக்கு என்ற கருத்தே மேலோங்கியுள்ளது. ஆனால் தமிழ்
மக்களைப் பொறுத்தவரை கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும் கூட்டடையாளத்தையும் பேணுவதற்கு வடக்கு-கிழக்கு இணைந்த தாயக ஒருமைப்பாடு அவசியமாகும். இதில் எந்தவித சமரசங்களையும் மேற்கொள்ள முடியாது.
நான்காவது ஆயுதப் போராட்ட காலத்தில் ஏற்பட்ட கசப்பான
அனுபவங்களாகும். இக் காலத்தில் இருபக்கத்திலிருந்தும் ஏற்பட்ட
வன்முறைகளினால் இரு சமூகங்களும் ஒருவரையொருவர் நம்பத் தயாராகவில்லை.
அவர்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு ஆழமாக வேரூன்றி உள்ளது. இதுவும்
தமிழ்த் தேசிய அரசியலோடு இணைந்து கொள்வதற்கு தடைகளை
ஏற்படுத்துகின்றது.
ஐந்தாவது முஸ்லீம் சமூகம் ஒரு வர்த்தக சமூகமாக இருக்கின்ற
நிலையாகும். அவர்களின் வர்த்தக இருப்பு தென்னிலங்கையிலேயே
தங்கியிருக்கின்றது அந்த இருப்புக்கு இடைஞ்சல்கள் ஏற்படுவதை அவர்கள்
பெரிதாக விரும்பவில்லை.

எனவே மேற்கூறிய காரணங்களினால் தற்போதைக்கு தமிழ்த்
தேசிய அரசியலின் மூலோபாயத் திட்டங்களோடு முஸ்லீம்கள்
இணைந்துகொள்வதற்கான சாத்தியங்கள் இல்லை. எதிர்காலத்தில் இந்தப் போக்கில் மாற்றங்கள் ஏற்படலாம். பெரும் தேசியவாதம் இன்று தமிழர்களைவிட முஸ்லீம்களை நோக்கித்தான் மூர்க்கமாக பாயத் தொடங்கியுள்ளது. இந்தப் பாய்ச்சலிருந்து தற்பாதுகாப்பு நிலையை எடுக்கவேண்டுமானால் தமிழ்த்தேசிய அரசியலோடு இணக்கத்திற்கு வருவதைத்
தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை.

“பொத்துவில் முதல் பொலிகண்டி
வரை” போராட்டத்தின் போது அதற்கான சாயல் தெரிந்தது. அப்
பேரணியில் கிழக்கின் தமிழ் மக்கள் இணைந்து கொண்டதைவிட முஸ்லீம்
மக்கள் இணைந்துகொண்டதே அதிகம். ஆனாலும் இந் நிகழ்வு மட்டும்
போதுமானதல்ல.

இன்னோர் பக்கத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களினது மட்டுமல்ல முஸ்லீம் மக்களினதும் தாயகம் என்பதும் யதார்த்த நிலையாகும்.
எனவே வடக்கு-கிழக்கில் இரு சமூகங்களினதும் இருப்பை பாதுகாக்க வேண்டுமானால் இருதரப்புக்கும் இடையே ஒருங்கிணைவு அவசியம். இந்த
யதார்த்த நிலை காரணமாக முஸ்லீம் தரப்பு அதிகம் விலகிச் செல்ல முடியாத
நிர்ப்பந்தமும் உண்டு. சிறியளவிலாவது ஒருங்கிணைவுக் கதவைத் திறக்க
வேண்டிய நிலையிலேயே முஸ்லீம் தரப்பு இருக்கின்றது.
எனவே இது விடயத்தில் தமிழ்த் தரப்பிற்கும் பொறுப்பு உள்ளது.
படிப்படியாக ஒருங்கிணைவுக் கதவைத் திறந்து பெரிதாக்குவது என்பதே அந்தப் பொறுப்பாகும். இதில் அவசரப்படுவது முதலையே நாசமாக்கிவிடும்.

எனவே தமிழ்த் தரப்பு முரண்படக்கூடிய விவகாரங்களை சற்றப் பின்தள்ளிவிட்டு உடன்படக்கூடிய விவகாரங்களில் ஒருங்கிணைவுக் கதவினை
திறக்க முற்படுவதே தற்போதைய காலத்தில் பொருத்தமானதாக இருக்கும். இப்போது எழும் கேள்வி ஒருங்கிணைவுச் செயற்பாட்டை
எங்கிருந்து ஆரம்பிப்பது. இரு தரப்பும் பாதிப்படையக் கூடிய
பொதுவிவகாரங்களிலிருந்து ஒருங்கிணைவுச் செயற்பாட்டை
ஆரம்பிக்கலாம். இன்று பயங்கரவாதத் தடைச்சட்டம்ரூபவ் காணிப்பறிப்பு,
தமிழ்மொழி அமூலாக்கம்,  அரசியல் கைதிகள் விவகாரம் என்பவை
பொதுப் பிரச்சனைகளாக உள்ளன. இந்த விவகாரங்களில் ஒருங்கிணைந்து
செயற்படலாம். இந்த ஒருங்கிணைவினூடாக நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பிக்
கொண்டு வடக்கு-கிழக்கு இணைப்பு, சமஸ்டி போன்ற விவகாரங்களுக்கு
செல்லாம்.

இந்த இரண்டாம் கட்ட செயற்பாடுகள் காலதாமதமாகி தமிழ்த்
தரப்பின் அரசியல் செயற்பாட்டிற்கு இடைஞ்சலாக இருக்குமானால் வடக்கு- கிழக்கில் உள்ள தமிழ் பிரதேசங்களை நிலத் தொடர்ச்சியற்ற
வகைகளிலாவது இணைத்து அதற்கு சுய நிர்ணயம் கோருகின்ற அரசியலை
தமிழ்த் தரப்பு முன்னெடுக்கலாம். அந்த முன்னெடுப்புக்களின் போது கூட கூடியவரை முஸ்லீம் தரப்புடன் முரண்படாமல் இருப்பது அவசியம்.
எதிர்காலத்தில் முஸ்லீம்களும் இணைந்துகொண்டால் இருதரப்பும் இணைந்த சுய நிர்னய அரசியலை நகர்த்திச் செல்லலாம். எதிர்காலத்திலாவது முஸ்லீம்கள் தமிழ்த்தேசிய அரசியலோடு இணைந்து கொள்வதற்கான முன் நிபந்தனை இணைந்த தாயகத்தில் முஸ்லீம்களின் வகிபாகம் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டை தமிழத்தரப்பு எடுப்பதே!
முஸ்லீம்கள் தமிழ்த்தேசிய அரசியலோடு அடையாளப்படுத்த விரும்பாத நிலையில் ஒரு தாயகத்தில் வாழும் இரண்டு தேசிய இனங்கள் என்ற வகையிலேயே இந்த வகிபாகம் வரையறுக்கப்படல் வேண்டும். இது விடயத்தில் முஸ்லீம்களின் தனி அதிகார அலகு கோரிக்கையை பரிசீலிக்க தமிழ்த்
தரப்பு தயங்கக் கூடாது.
13வது திருத்தமோ, இலங்கை-இந்திய ஒப்பந்தமோ,  பெரியளவிற்கு
இரண்டு சமூகத்திற்கும் பயனளிக்கப் போவதில்லை. 13வது திருத்தம் சுய
நிர்ணயத்திற்கு தடையாக உள்ளது. இலங்கை-இந்திய ஒப்பந்தம்
காலாவதியாகிவிட்டது. எனவே இந்த விவகாரங்கள் தொடர்பாக இரு சமூகங்களும் முரண்படுவது ஆரோக்கியமானதல்ல.
இரு சமூகங்களும் எதிர்காலத் தலைமுறையின் அமைதியான வாழ்வு
பற்றி சிந்திப்பதே தற்போதைய நிலையில் ஆரோக்கியமானது.

Recommended For You

About the Author: admin