கொழும்பு – பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு கைப்பற்றிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கமைய, கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன்,ஓய்வுபெற்ற வைத்தியருக்கு குறித்த கைக்குண்டை வழங்கியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில்,கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சிறையில் அடைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பொரளையிலுள்ள தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்தியரின் மகன் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கத்தோலிக்கர்களை சிக்க வைத்து கர்தினாலை சிறையில் அடைக்கும் திட்டம் இருப்பதாகவும்,பொரளை தேவாலயத்தில் குண்டு வைப்பு வெறும் நாடகம் என்றும், தனது தந்தைக்கு மனநோய் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில்,அண்மையில் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் மேலதிக தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் மா அதிபர் வெளிப்படுத்தியுள்ளனர்.
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டை வைத்த நபர், நாரஹேன்பிட பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையிலும், பெல்லன்வில விகாரை வளாகத்திலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.