யாழ்.கோண்டாவில் பகுதியில் வீடு புகுந்து நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டிலிருந்த நபர் மீது தாக்குதல் நடத்தியதுடன், வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது. குறித்த சம்பவத்தையடுத்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சில பொலிஸார்,
தாக்குதல் நடத்தியவரையும், தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நபரையும் சமாதானப்படுத்திவைத்துள்ளனர். இந்த விடயம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொறுப்பதிகாரி, தாக்குதல் நடத்திய சந்தேகநபரை கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் சந்தேகநபரை 3ம் திகதிவரை
விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை குறித்த சந்தேகநபர்,கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் நல்லுறவை பேணி வருபவர் எனவும்,
கடந்த ஆண்டு தன்னுடன் முரண்பட்டுக்கொண்ட இளைஞன் ஒருவரை சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களை மது போதையில் வாகனத்தில் அழைத்து சென்று , இளைஞனை வாகனத்தில் கடத்தி தாக்கியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே போல் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் நல்லுறவை பேணி சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.