காணாமல் போனோர் தொடர்பிலான உண்மைகளை கண்டறிந்து தீர்வு காண்பது நீதியமைச்சரின் வடக்கு விஜயத்தில் ஒரு முக்கிய விடயமாக உள்ளது. காணி விவகாரங்கள் உள்ளிட்ட ஏனைய சட்ட நடவடிக்கைகளை போன்று காணாமலாக்கப்பட்டோர் விடயம் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது என அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த விடயத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடுகள் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஒழுங்குமுறையுடன் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் எவ்வித தடைகளோ அல்லது புதிய சட்ட விதிமுறைகளோ நடைமுறைப்படுத்தப்படவில்லை. காணாமல் போனோர் மற்றும் அது தொடர்பான அலுவலக நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி முன்னெடுத்து வருகின்றார்.
அதற்கமைய நீதி அமைச்சரின் வடக்கு விஜயத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான உண்மைகளை கண்டறிந்து தீர்வு காண்பது முக்கியமான விடயமாகவுள்ளது.
மேலும் காணி விவகாரங்கள் உள்ளிட்ட ஏனைய சட்ட நடவடிக்கைகளை போன்று காணாமலாக்கப்பட்டோர் விடயம் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இது தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை.
காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடமாடும் சேவையின் பிரதான வேலைத்திட்டம் காணிகள் உள்ளிட்ட சட்ட ரீதியான விடயங்களைப் போன்றே காணாமல் போனோர் தொடர்பிலும் அவர்களின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகும்.
அந்த நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் வழங்கப்படக் கூடிய உச்சபட்ச ஒத்துழைப்பினை வழங்க தொடர்ந்தும் செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.