
பருத்தித்துறை சுப்பர்மடம் உட்பட்ட வடமராட்சி பருத்தித்துறை கரையோரமாக இடம் பெற்ற மீனவர்கள் போராட்டத்தில் வீதி தடைகளை ஏற்படுத்தியும், வீதிக்கு குறுக்காக கொட்டகை அமைத்தும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இடம் பெறும் போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது.

பருத்தித்துறை போலீசாரால் பருத்தித்துறை கௌரவ நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்க்கே இவ்வாறு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

இதனையடுத்து வீதியில் போடப்பட்டிருந்த வீதித்தடைகள் அகற்றப்பட்டதுடன் மீனவர்கள் தங்கள் போராட்டத்திற்க்காக போடப்பட்டிருந்த தகர கொட்டகைகள் அகற்றப்பட்ட நிலையில் மீனவர்கள் வீதி ஓரமாக தரப்பாளை விரித்து தமது போராட்டத்தை தொடர்கிறார்கள்.
மாதகல் பகுதி சங்கங்களும் ஆதரவு
இதேவேளை நேற்றைய தினம் 18 சங்கங்கள் இணைந்து மேற்கொள்கின்ற சுப்பர் மடம் போராட்டத்திற்க்கு மாதகல் பகுதியில் இருந்து 4 சங்கங்கள் தமது ஆதரவை தெரிவித்து இணைந்து கொண்டு தமது கண்டனங்களையும் வெளியிட்டிருந்தார்கள்,




மீன்பிடி அமைச்சர் விரட்டியடிப்பு
இதனை தொடர்ந்து போராட்ட இடத்திற்கு வருகைதந்த மீன்பிடி அமைச்சர் போராட்டத்தை கைவிடுமாறு கோரியிருந்த நிலையில் மீனவர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம் பெற்ற வாக்குவாதத்தை அடுத்து கோபமாடைந்த அமைச்சர் சண்டித்தனத்திலும் ஈடுபட்டதுடன் குறித்த இடத்திலிருந்தும் ஆவேசமாக வெளியேறி சென்றார்,

சுமந்திரன், சாணக்கியன் பங்கேற்பு
தொடர்ந்து போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் தமது ஆதரவை தெரிவித்ததுடன் மீனவர்களுடன் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட மீனபிடி அமைச்சர் டக்ளஸ் தேசானந்த மீனவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
முன்னணி உறுப்பினர்கள் பங்கேற்பு
இதனை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்ட ஆலோசகர் க.சுகாஸ் பிற்பகல் வேளை தமது ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் கலண்து கொண்டிருந்தார்.
இவ்வேளை நீதிமன்றத்தின் உத்தரவை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியால் வாசித்து காட்டப்பட்டதை தொடர்ந்து வீதியை மூடி போடப்பட்டிருந்த பந்தல் அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மீனவர்கள் வீதியோரமாக தரப்பாளை விரித்தும் தகர பந்தலை போட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட வேளை அதனை அகற்ற போலீசார் முற்பட்ட வேளை சட்டத்தரணி க. சுகாசிற்க்கும் பொலீசாருக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் இடம் பெற்றது எனினும் பந்தல் உரிமையாளரை மிரட்டி போலீசார் வீதி ஓரத்தில் போடப்பட்ட. பந்தலை அகற்றியுள்ள நிலையில் தற்போது மீனவர்கள் தர்ப்பாளில் கொட்டும் பனிக்குளிரிலும் தமது போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் இன்று கரையோரம் எங்கும் கறுப்பு கொடி போராட்டம் நடாத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.



நீதிமன்ற படப்பிடிப்பாளராக மாறிய போலீஸ்
இதேவேளை மீனவர்களை சிவில் உடையில் படம் பிடித்துக் கொண்டிருந்தவரை மீனவர்கள் ஏன் படம் பிடிக்கின்றீர் என கேட்டபோது அவர் தான் நீதிமன்றம் ஊடகவியலாளர் என தெரிவித்தார் இந்நிலையில் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்கப்பட்டதற்க்கு அருகிலிருந்த போலீசார் ஒருவர் அவர் போலீஸ் என்றும் தெரிவித்தார் இதனால் சில நிமிடங்கள் பொலீசாருக்கும் சட்டத்தரணி சுகாசிற்க்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது. நேற்றைய போராட்டத்தில் சுமார் ஆயிரம் பேர்வரை கலந்து கொண்டமை குறிப்பிட தக்கது.
