ஆங்கிலேய காலனித்துவ ஆட்சி நாட்டில் இருந்து கிளம்பும் போது சிங்கள பெரும்பான்மையிடம் ஆட்சியை வழங்கிய குறியீட்டு நாளே பெப்ரவரி 4. இந்த நாள் தமிழருக்கு ஒரு கரிநாள், ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து சிங்கள இனவெறி பிடித்த பெரும்பான்மையிடம் ஒப்படைக்கப்பட்ட ஆட்சியின் கைமாற்றமே அன்றி தமிழர்களுக்கான சுதந்திர நாள் அன்று. முதன்முதலில் ஆட்சிப்பீடம் ஏறிய டி.எஸ் செனநாயக்க முதல் இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்ச வரை சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் அனைத்தும் ஒரே பேரினவாத கொள்கையை பின்பற்றி 1948 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பல இலட்சம் அப்பாவி தமிழர்களை கொன்ற குவித்தது. ஈழத்தமிரைப் பொறுத்தவரையில் சுதந்திர மலரும் நாளே உண்மையான சுதந்திர நாளாகும்.
சோல்பெரி அரசியலமைப்பை ஊருவாக்கிய சோல்பரி பிரபு தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ்வார்கள் என்று எதிர்பார்த்துத்தான் அரசியலமைப்பை வரைந்தார். பிரித்தானியர்கள் நாட்டிலிருந்து சென்ற மிகக் குறுகிக காலத்திற்குள்ளேயே சிங்களப் பெரும்பான்மை தனது சுயரூபத்தை வெளிக்காட்டத் தொடங்கியது. சூழ்ச்சியும் தந்திரமும் வாய்ந்த சிங்களத் தலைவர்கள் காலத்துக்குக் காலம் அமைச்சர் பதவி, பட்டம், வாக்குறுதி போன்றவற்றை வழங்கித் தமிழ்த் தலைவர்களை ஏமாற்றினார்கள். சிங்களத்தால் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்று உணர்ந்த திரு. செல்லப்பா சுந்தரலிங்கம் அவர்கள் சோல்பெரி பிரபுவிற்கு ஒரு முறைப்பாட்டுக் கடித்தை அனுப்பினார். அவரது மடலை வாசித்த சோல்பெரி பிரபு அதிர்ச்சியடைந்து தமிழர்களுக்கு நேர்ந்த அநீதிக்கு தானும் ஒரு முக்கிய காரணமாகிவிட்டேன் என்று மனம் வருந்தி திரு. செ. சுந்தரலிங்கத்துக்கு கடிதமொன்றையும் எழுதியிருந்தார். இன்றும் தமிழர் அவலத்தைச் சொல்லும் ஒரு முக்கியமான வரலாற்று ஆவணமாக இக்கடிதம் உள்ளது.
சோல்பெரி பிரபுவின் இன்னுமொரு முக்கியமான கருத்தையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தாமனது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு தமிழ்மக்களின் பங்களிப்பென்பது மிகப்பெரியது, நான் அவர்களின் கடுமையான உழைப்பைக் கண்டு மிகவும் பெருமிதமடைகிறேன். சிங்களமக்களை விட தமிழ்மக்கள் கல்வியிலும், நிர்வாகத்திலும் அதிதிறமை உடையவர்கள். தான் முன்மொழிந்த அரசியல் யாப்பில் தமிழர்களுக்கு போதுமான பாதுகாப்பு இருப்பதாக நினைத்த லோட் சோல்பெரி, யாப்பின் 29வது சரத்து எதிர்பார்த்தளவு பாதுகாப்பை வழங்கவில்லை என்பதை பிற்காலத்தில் உணர்ந்தார்.
இலங்கைக்கு என்றோ ஒரு நாள் சுதந்திரம் பெற்றுத் சுயாட்சி அமைக்கும் என்று எந்தச் சிங்களத் தலைவர்களும் கனவிலும் கூட நினைக்கவில்லை. ஆனால் இலங்கைக்கு ஒரு நாள் தன்னாட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சகோதரர்களான சேர்.பொன். அருணாசலம், சேர்.பொன். இராமநாதன் ஆகியோரே முதன் முதலில் மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார்கள். தமிழீழம் என்கிற சொற்பதத்தை முதன்முதலில் உபயோகித்தியவர் சேர் பொன் அருணாச்சலம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். பின்னர் தமிழீழக் கொள்கையை முன்வைத்து முதன்முதலில் அரசியல் களத்தில் பணியாற்றத் தொடங்கியவர்கள் திரு. செ. சுந்தரலிங்கமும், வீ.நவரத்தினமும் ஆவார்கள். தமிழர்களால் அளிக்கப்படும் வாக்குகள் சோசலிச தமிழீழத்தை உருவாக்கும் என்று கூறியவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள். காலப்போக்கில் இந்த தனிநாட்டுச் சிந்தையும் தமிழர்களை இனவழிப்பில் இருந்து பாதுகாகக் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 1977ல் சனநாயக ரீதியாகத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று தமிழீழக் கொள்கையை மேலும் வலுப்படுத்தினார்கள் தமிழர்கள். அகிம்சை வழியில் நியாயமான அரசியற்தீர்வுக்காகப் போராடிய இலங்கைத்தீவின் பூர்வீகக் குடிகளான ஈழத்தமழிர்கள் தொடர்ந்தும் இனவழிப்பிற்கு உட்படுத்தப்பட்டதாலேயே தமிழீழப் போராட்டம் தமிழ் இளைஞர்களால் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து மேதகு வே. பிரபாகரன் தலைமையில் மூன்று தசாப்தமாக வலுப்பெற்று அசைக்க முடியாத பேரியக்கமாக வளர்ந்திருந்தது.
பல அர்ப்பணிப்புகள், இழப்புகள், ஏமாற்றங்களை தொடர்ச்சியாக சந்தித்து வரும் ஈழத்தமிழர்களின் அரசியல் வேணவாவை நிறைவேற்ற இன்றைய அரசியல்வாதிகள் ஒன்றுமில்லாத 13வது திருத்துச் சட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். ஓற்றையாட்சிக் கட்மைப்புக்குள் உள்ள 13 ஐ ஏன் இவர்கள் கேட்கிறார்கள். இந்தியாவின் பூகோள அரசியலையும் நலன்களையும் பேணவா இவர்கள் ஈழத்தமிழர்களின் சுதந்திர தாகத்தை நிர்மூலமாக்குகிறார்கள்? 2009 பேரிழப்புக்குப்பின், ஒரு ஆரம்ப்பப் புள்ளியாக் கூட ஏற்கமுடியாத 13ம்திருத்தச் சட்டதை மீண்டும் தூசி தட்டி புத்துயிர் வழங்கி, சிங்களத்தின் பாராளுமன்ற கதிரைகளை கைப்பற்ற கபட நாடகமாடும் தமிழ்த் தலைமைகளை இனங்கண்டு தமிழ் அரசியல் இருந்து விரட்டியடிக்க வேண்டிய நாளாக கருதுங்கள்.
2013 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசாங்கத்தால் (GoSL) இந்த சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பகிர்ந்தளிக்கப்படாததால் எந்த அபிவிருத்தியும் தமிழர் பிரதேசங்களில் நடைபெறவில்லை. தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் தடுக்கும் அதிகாரம் சிங்களவர்களைக் கொண்ட அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களுக்கு மட்டுமே உண்டு. தமிழர் தாயகத்தில் தனியாருக்குச் சொந்தமான அனைத்து வளமான பண்ணைகளும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான உள்ளூர் தமிழர்கள் நிரந்தர வறுமையில் அடிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இலங்கையின் சிங்கள அரசியல் கட்டமைப்பு கடந்த ஏழு தசாப்தங்களாக தமிழ் மக்களுடன் செய்து கொண்ட அனைத்து அரசியல் உடன்படிக்கைகளையும் ஒருதலைப்பட்சமாக ரத்து செய்துள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக நடந்து வரும் கட்டமைப்பு ரீதியான இனவழிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, இந்தியா, ஐக்கியராச்சியம், கனடா மற்றும் நோர்வே உட்பட ஐரோப்பாவுடன் இணைந்து செயற்பட அமெரிக்க அரசாங்கம் கருதினால், தமிழர்கள் இதற்கு ஆதரவாக இருப்போம். மேலும், தமிழர்களின் அரசியல், கலாசார மற்றும் பொருளாதார எதிர்காலம், சுயநிர்ணய உரிமை மற்றும் பறிக்க முடியாத நிலையான அரசியல் தீர்வைக் காண்பதற்கு இந்த முன்னெடுப்பு உதவும் என்று நம்புகிறோம்.
தமிழர் பிரதேசங்களில் இருந்து சிங்களக்குடியேற்றங்கள் அகற்றப்பட்டு, அடாத்தாக நிறுவப்பட்ட பௌத் விகாரைகள் விலக்கப்பட்டு, அத்துமீறி அபகரிக்கப்பட்ட தமிழர் பூர்வீக நிலங்கள் திரும்பவும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு இராணுவம் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிய பின்னரே தமிழர்களுக்கு நிரந்தரமான சுதந்திர நாள் கிட்டும். அதுவரை பெப்ரவரி 4ம் திகதி ஈழத்தமிழர்களுக்கு கரிநாளே.
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை என்றுள்ளது