2019 ஆம் ஆண்டு வர்த்தமானி வெளிவந்த பிரகடனத்தின்படி 2021 ஆம் ஆண்டில் இருந்தே காலி மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. 2021 நவம்பர் மாதம் 24 ஆம் திகதியே மலையக அரசியல் அரங்கம் நுவரெலிய மாவட்ட செயலாளரை சந்தித்து இது குறித்து கேட்டறிந்ததோடு உப செயலகங்கள்தான் திறக்கப்படவுள்ளது என ஊடகங்களுக்கு அறிவித்தோம். அதற்குப்பிறகே நுவரெலிய மாவட்டத்தில் இரண்டு உப பிரதேச செயலக காரியாலயங்கள் திறக்கப்பட்டன. இதனை எதிர்த்து நுவரெலிய மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மனு கையெழுத்து இயக்கத்தை நடாத்தியது. இப்போது வடக்கு முதல் தெற்கு வரை கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்து தேசிய ரீதியாக கவனத்தைப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு அங்கமாகவே இன்று கிளிநொச்சி பகுதியில் கையெழுத்து சேகரிப்பில் ஈடுபடுகின்றோம்.
இந்த நிலையிலேயே எமது கையெழுத்து இயக்கம் முதல் கட்ட வெற்றியைப் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனுக்கு எமது கையெழுத்து இயக்கம் குறித்த தகவல் தெரிந்து இருக்கிறது என்பது அவரது செய்தி அறிக்கையிலே தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பனராக பேசியிருக்க வேண்டிய விடயத்தை இப்போதுதான் இராதாகிருஷ்ணன் தெரிந்து கொண்டுள்ளார் என்பது எமது அரங்கத்தின் செயற்பாடுகளுக்கு கிடைத்த முதல் வெற்றியே. தவிரவும் கையெழுத்து இயக்கம் எதுவும் இதுவரை நுவரெலியாவில் வெற்றி பெற்றதில்லை எனவும் கூறி உள்ளார். இதற்கு முன் எதற்காக அவர் நுவரெலிய மாவட்டத்தில் கையெழுத்து சேகரித்தார் என்பதுவும் அதனால் அவருக்கு கிடைக்காமல் போனது என்ன ? என்பது பற்றி நாம் அறியோம். ஆனால் நாங்கள் வடக்கு வந்து கையெழுத்து இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர் மாதாமாதம் வடக்கு வந்து கையெழுத்து இட்டு வென்ற விடயம் என்ன என்பதை உலகமே அறியும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராகவும் இலங்கைத் தமிழரசு கட்சி வடக்கில் கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறது என்பதையும், அதனை முன்னெடுப்பது சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அவர்கள் என்பதையும் அவருக்கு மலையகம் அரசியல் அரங்கம் நினைவு படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.