சாராய கடத்தல்களை கண்டறிந்து தண்டனை கொடுக்கும் பொலிசார் இரணைமடுவில் கனரக வாகனங்களில் மண்ணகழ்வதை கண்டுகொள்வதில்லை – ஜீவராசா….!

சாராய கடத்தல்களை கண்டறிந்து தண்டனை கொடுக்கும் பொலிசார் இரணைமடுவில் கனரக வாகன்களில் மணல் அகழ்வதை கண்டு கொள்வதில்லை என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மிக முக்கியமான குளமாகவும், விவசாய குளமாகவும் காணப்படும் இரணைமடு குளத்தில் அதிகளவான மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றது. குறித்த மண்ணகழ்வினை தடுப்பதற்கு பொலிசார் முனைப்பு காட்டுவதாக தெரியவில்லை.
கனரக வாகனங்களைக்கொண்டு பல கியூப் மணல் வெளிமாவட்டங்களிற்கு ஏற்றி செல்லப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்தவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இரணைமடு குளம் முழுமையாக அழிவடைந்துவிடும். இந்த மண்ணகழ்வினை கட்டுப்படுத்தாமையானது குளத்தினை அழிப்பதற்கான திட்டமாக இருக்குமோ என்று சந்தேகம் எழுகின்றது.
சாதாரணமாக சாராயம் கடத்தப்படுவது தொடர்பில் பொலிசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்துகின்றனர். ஆனால் இவ்வாறு பாரிய மண் கொள்ளை இடம்பெறும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தவறுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி, இராணுவத்தினர் ஊடாக முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews