யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் நபரொருவரைக் கடத்திச் சென்று பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நபரொருவரை முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று அவரிடமிருந்து 2 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் , 94 000 ரூபா பெறுமதியுடைய இரு கையடக்க தொலைபேசிகள் என்பவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பருதித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் அன்றைய தினமே இரவு வேளையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 46 வயதுடைய பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கொள்ளையிடப்பட்ட பொருட்களை மீட்பதோடு , இதனுடன் தொடர்புடைய ஏனைய சந்தேநபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.