யாழ்.மாவட்ட மீனவர்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி தமழ் அரசியல்வாதிகள் சிலர் மிக மோசமான அரசியல் செய்வதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் என்.வி.சுப்பிரமணியம் சாடியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
இந்திய இழுவை படகுகளினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களுக்கு ஆதரவாக மாவட்டங்கள்தோறும் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. மீனவர் போராட்டங்களில் கலந்துகொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள், ரோலர் படகுகளை கட்டுப்படுத்துவதற்கு உகந்த தீர்வினை எட்டுவதற்கு வழி செய்யவில்லை. மீனவர் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குகிறோம் என கூறிக்கொண்டு போராட்ட பந்தலில் தமது சாக்கடை அரசியலை செய்கிறார்கள்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதன் பின் இன்றுவரை இந்திய மீனவர்களினால் வடபகுதி மீனவர்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் அண்மையில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் தாக்கப்பட்டனர்.
இருவர் இறந்து கரை சேர்ந்தார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக மீனவர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் தொடர்கதையாக சென்று கொண்டிருக்கிறது.
இந்திய மீனவர்கள் வடபகுதி கடலில் எல்லை தாண்டும் நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் அரசாங்கம் மௌனமாக இருக்கின்றது. கடற்படை இந்திய மீனவர்களை பாதுகாக்கிறது.
கடற்தொழில் அமைச்சர் இந்திய மீனவர்களை பிடிப்பேன் என கூறிவரும் நிலையில் அவர் கூறிய வார்த்தைகளை விட குறைவான படகுகளையோ பிடித்துள்ளார். எமது மீனவர்களின் 2500க்கும் மேற்பட்ட படகுகள் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக எமது கடற்பரப்பில் நுழைந்த படகுகளை விடுவிக்குமாறு போராட்டம் நடத்துகிறார்கள். இழுவைமடித் தொழிலை தடைசெய்யும் உயர்மட்ட கலந்துரையாடல் இந்தியாவில் இடம்பெற்றபோது இந்திய அரசும், தமிழ்நாடு அரசும், குறித்த தொழிலை தடைசெய்வதற்கு இணங்கிய நிலையில் தொடர்ச்சியாக குறித்த தொழில் நடைமுறையில் உள்ளது.
ஆகவே தமிழ்நாட்டின் முதலமைச்சர் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழையும் இந்திய மீனவர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.